Hot Posts

6/recent/ticker-posts

தமிழக சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள், நிருபர்கள் செல்போன் கொண்டு வர தடை: சபாநாயகர் உத்தரவு!!


தமிழக சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள், நிருபர்கள் மற்றும் அதிகாரிகள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டசபையில் இன்று சபாநாயகர் ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம்:

தமிழக எம்எல்ஏக்கள் நாளை முதல் முதல் சட்டசபைக்குள் செல்போன்களைக் கொண்டு வரக்கூடாது. அவர்களது ஓய்வு அறையிலும், நூலகப் பகுதியிலும், இந்த வளாகத்தின் லாபியிலும், கட்சி அறைகளிலும் ஒவ்வொரு எம்எல்ஏக்கும் தனித்தனி கூண்டு அமைக்கப்படும். அதில் செல்போன்களை பூட்டி வைத்து விட்டு சபைக்கு வரவேண்டும்.

சட்டசபை வளாகத்துக்குள் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்காக கட்டணம் செலுத்தி பேசும் பி.எஸ்.என்.எல். போன் அமைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ஓராண்டு பயன்படுத்தக்கூடிய ரூ. 100க்கான ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும். இதில் ரூ.75க்கு பேசலாம்.

தொடர்ந்து பேச வேண்டுமானால், அவர்களே ஸ்மார்ட் கார்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டில் பணம் செலுத்துவதற்காக சட்டசபை வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

அதே போல பத்திரிகையாளர்கள், மற்றும் அதிகாரிகளும் சட்டசபைக்குள் செல்போன்களை கொண்டு வரக்கூடாது. பத்திரிகையாளர்களுக்கு மேல் மாடத்தில் செல்போன்களை வைக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சமீபத்தில் கர்நாடகம் மற்றும் குஜராத் சட்டசபைகளில் பாஜக எம்எல்ஏக்கள் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்து பிடிபட்டது நினைவுகூறத்தக்கது.