Hot Posts

6/recent/ticker-posts

பள்ளிகளில் 6ம் வகுப்பிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்படும்: ஜெயலலிதா!!


தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 6ம் வகுப்பிலேயே சாதி, வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவர்கள் பல்வேறு உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், அரசு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கும், உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறுவதற்கும் தேவைப்படும் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை கால தாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு 6ம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 6ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவ மாணவியர் பயன் பெறுவர்.

மேலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அதன் பின்னர் உரிய நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பொருட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்பதையும், இந்த நிலையம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி நிலையமாகவும் செயல்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.