Hot Posts

6/recent/ticker-posts

குறைகளைக் களைந்து ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி வெற்றிபெறும்: தோனி!!


தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. மொத்தம் 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் சென்னையில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சென்னை அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி, 'குறைகளைக் களைந்து சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும். கடந்த காலங்களில் ஐ.பி.எல் தொடர்களில் சென்னை அணி தொடக்கத்தில் பின்தங்கினாலும், பின்னர் எழுச்சி கண்டுள்ளது. அதுபோல் இம்முறையும் எழுச்சி பெறும்’ என்றார்.
 
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது எதிர்காலம் பற்றி பேசிய தோனி, ‘2015 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முழு உடல் தகுதியுடன் இருக்க விரும்புகிறேன். எனவே உடல் ஒத்துழைப்பை பொறுத்தே டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். தேவைப்பட்டால் டெஸ்ட் போட்டிக்கான அணியில் புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படும்’ எனவும் கூறினார்.
 
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது பற்றி தோனி அடிக்கடி கூறி வருகிறார்.