நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான இன்றைய போட்டி.
பெங்களூர் மைதானத்தில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றது இல்லை. அதேபோல் நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2 லீக் போட்டிகளிலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.
தம்மை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியை இன்றைய போட்டியில் வென்று பழிதீர்த்து அடுத்த சுற்றுக்கு சென்றாக வேண்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதலே சொதப்பி வரும் முரளி விஜய்யை இன்றைய போட்டியிலும் டோனி நம்புவார் எனில் ரொம்ப கஷ்டம். தொடக்கப் போட்டியிலேயே சோபிக்காமல் போய் நடுவில் ஜொலித்து கடைசியில் எந்தப் பிரயோஜனமும் இல்லாதவராகவே இருக்கிறார் ரூ10 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஜடேஜா. இவரையும் டோனி எப்படி கையாளப் போகிறாரோ தெரியவில்லை.
டோனி, ஹசி, பிளெஸ்சிஸ் என வெளித்தோற்றத்தில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கின்ற போதும் எவருமே தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. ஏதோ போனால் போகிறது பாணியில் நினைத்த நேரத்தில் ஆடுவது என்பதுதான் "ஸ்டைலாக" வைத்திருக்கின்றனர்.
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய தமிழக வீரர்களாக அனிருத், பத்ரி ஆகியோரும் கை கொடுக்காமலேயே இருக்கின்றனர். மற்ற அணிகளைப் பொறுத்தவரையில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் சொந்த மைதானத்தில் வெளுத்துக் கட்ட மற்ற வீரர்கள் கை கோர்த்துக் கொள்வர். ஆனால் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில்தான் உள்ளூர் ஆட்டக்காரர்கள் ஏதோ வேடிக்கை பார்க்க வந்த விருந்தாளிகளைப் போல ஆடுகின்றனர்.
கேப்டன் டோனி மட்டும்தான் அனேகமாக அதிகமாக பேட்டிங் ஆர்டரை மாற்றாத ஒருவராக இருக்க முடியும். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மாறுதல்களை செய்தால்தானே பலம்- பலவீனத்தை தெரிந்து கொள்ல முடியும் ஆனால் அதையெல்லாம் செய்ய டோனி தயாராக இல்லை,
நடப்பு ஐ.பி.எல். போட்டியின் பார்மேட்டும் கூட மற்ற அணிகளால் மாற்றப்பட்டு விட்டன. ஒரு அணியில் அனைத்து வீரர்களுமே ஆல்ரவுண்டர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 20 ஓவர்தானே.. நிலைத்து நின்று ரன் எடுக்கக் கூடிய 4 பேட்ஸ்மேன்கள், ரன்களைக் குறைவாக கொடுத்து விக்கெட் எடுக்கக் கூடிய பெளலர்களை வைத்துக் கொண்டாலே போதும் என்ற புதிய பாணி உருவாகி இருக்கிறது.
ஆனால் இதில் சென்னை சூப்பர்கிங்ஸ்தான் விதிவிலக்காக இருக்கிறது. ஆல்ரவுண்டர்கள் இத்தனை பேர் இருக்கிறோம்ல என்று கணக்குக் காட்டிக் கொண்டு பந்தா செய்வதுதான் பாணி.
தொடக்கப் போட்டியில் தம்மை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸை பழிதீர்த்து அடுத்த சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் செல்ல வேண்டுமெனில் நிச்சயம் தமது பார்முலாவை டோனி மாற்றியாக வேண்டும். நன்றாக ரன் அடிக்கக் கூடிய சாரி மிஸ்டர் டோனி முரளி விஜய் அல்ல...வீரர்களை முதலில் களமிக்கி மளமளவென ரன்களைக் குவித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்ற எண்ணத்துடன் சென்னை விளையாட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்த்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வலுவான அணியும்தான் என்பதை நிரூபிக்கப் போகிறதா? அல்லது அதிர்ஷ்ட தேவதை எப்படியும் கை கொடுக்கும் என்ற லக் பார்முலாவில் மிதக்கப் போகிறதா? என்பதுதான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு.
Social Plugin