ஐபிஎல் 5 தொடரின் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதனால் நான் சிறந்த கேப்டனாக அறியப்படுகிறேன் என்று கெளதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று சென்னை மைதானத்தில் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி வரை போராடி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கம்பிரின் தலைமையில் செயல்பட்டது. கம்பிரின் சிறப்பான தலைமையே, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்த நிலையில் ஒரு சிறந்த அணியின் செயல்பாடு மூலம் ஒரு சிறந்த கேப்டன் அறியப்படுவதாக கம்பிர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பை வென்றது, அணியின் ஒருமித்த செயல்பாட்டை காட்டுகிறது. ஒரு சிறந்த அணியின் ஆட்டம் மூலமே, ஒரு சிறந்த கேப்டன் அறியப்படுகிறான். ஒரு சிறந்த கேப்டனால் ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியாது.
நாம் சிறப்பாக விளையாடினால், யாருமே நம்மை வீழ்த்த முடியாது என்ற கருத்தில் அதிக நம்பிக்கை கொண்டவன் நான். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற பிறகு, எனது மனதில் வந்த ஒரே வார்த்தை, போராட்டம் முடிந்தது என்பது தான்.
எங்கள் அணியின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. மேலும் அணியின் இக்கட்டான போட்டிகளில் கொல்கத்தா ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். கொல்கத்தா ரசிகர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஐபிஎல் கோப்பையை வென்றது மூலம் கொல்கத்தா ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம்
அணியின் வெற்றிகளுக்கு பாலாஜியின் பந்துவீச்சு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் சில போட்டிகளில் காயம் காரணமாக அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனது வருத்தம் அளித்தது.
பிஸ்லாவை அணியில் தேர்வு செய்த போதே, அவர் சிறப்பான செயல்படுவார் என்று நினைத்தேன். எனது நம்பிக்கையை பிஸ்லா காப்பாற்றி உள்ளார். இறுதிப் போட்டியி்ல் பிஸ்லா களமிறங்க வாய்ப்பு அளித்த மெக்கல்லம், பிஸ்லாவின் செயல்பாட்டை கண்டு மகிழ்ச்சி அடைந்தார் என்றார்.
Social Plugin