டுவென்டி20 போட்டிகளின் ஜாம்பவான்களான இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை பின்னுக்கு தள்ளிய வங்கதேசம் அணி, ஐசிசி தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வெற்றி, தோல்விகள் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) அவ்வப்போது தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. இதில் டுவென்டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என்று போட்டிகளுக்கு தகுந்தாற்போல தரவரிசை மாறுபடுகிறது.
ஐசிசி டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசை வெளியிடப்பட்டது. அயர்லாந்து அணிக்கு எதிரான 3 டுவென்டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேசம், முதல் முறையாக தரவரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
மற்றபடி தரவரிசையில் முதல் இடத்தில் இங்கிலாந்து நீடிக்கிறது. 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கையும் உள்ளது. தொடர் வெற்றியின் மூலம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய வங்கதேசம் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதன்பிறகு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியா தரவரிசையின் 8வது இடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் 9வது இடத்தில் உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் வங்கதேச அணியின் முன்னேற்றம், மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
Social Plugin