Hot Posts

6/recent/ticker-posts

கூடங்குளம் அணு மின் நிலையம்: ஒரு வழக்கு பைசல்-3 வழக்குகளில் 31ம் தேதி தீர்ப்பு!


கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான 4 முக்கிய வழக்குகளில் ஒன்றில் இன்று முடிவு தெரிந்தது. ஒரு வழக்கை மட்டும் இன்று உயர்நீதிமன்றம் பைசல் செய்து உத்தரவிட்டது. பிரதான வழக்கான அணு சக்தி கமிஷனின் சான்று குறித்த வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் வெள்ளிக்கிழமைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் சென்னை வடபழனியைச் சேர்ந்த பூவுலகம் என்ற அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் ஜி. சுந்தரராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கும் ஒன்று.
தனது வழக்கில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்ததை எதிர்த்து மனு செய்திருந்தார் சுந்தரராஜன்.
இதுதொடர்பாக தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முன்பு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், அணு உலையில் இருந்து கடலில் வெளியேற்றப்படும் கழிவு நீரின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று கூறியிருந்தது.
ஆனால் கடலில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கழிவு நீர் வெளியேற்றப்பட்டால், கடலில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகும் என்று கூறியிருந்தார் சுந்தரராஜன்.
இந்த நிலையில் தனது பழைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து இன்று ஒரு அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்தது. அதில்,
கூடங்குளம் அணு உலையில் இருந்து கடலில் வெளியேற்றப்படும் கழிவுநீரின் வெப்பநிலை, கடலின் சாதாரண வெப்ப நிலை அளவான சுமார் 30 டிகிரி செல்சியஸை விட 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மிகாமல் அதாவது 37 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்க வேண்டும்.

இதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருந்தது. இதை இன்று உயர்நீதிமன்ற பெஞ்ச் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
3 வழக்குகளில் 31ம் தேதி தீர்ப்பு
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு இந்திய அணு சக்திக் கழகம் கொடுத்த அனுமதிச் சான்றை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கே பிரதானமானதாகும். இது உள்பட இன்னும் 3 வழக்குகளில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. தற்போது இவை மூன்றும் 31ம் தேதி வெள்ளிக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்ப்புகளை அறிவிக்க வேண்டிய உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான துரைசாமி தற்போது மதுரை பெஞ்ச்சில் விசாரணைக்குப் போயிருப்பதால் அவரால் இன்று வர முடியவி்ல்லை. இதையடுத்து தீர்ப்பு 31ம் தேதி வெள்ளிக்கிழமை அளிக்கப்படும் என்று நீதிபதி ஜோதிமணி அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பில் என்ன சொல்லப்படவுள்ளது, அணு மின் நிலையம் திட்டமிட்டபடி செயல்பட வழி பிறக்குமா, தடை ஏதாவது வருமா என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. மேலும் இன்றைய தீர்ப்புக்குப் பிறகே அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.