Hot Posts

6/recent/ticker-posts

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதிப்பதா? வைகோ, சீமான் கண்டனம்!!


கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப மத்திய அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்து அளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை ஆகும்.

கூடங்குளம் அணுஉலை குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடக்கும் வழக்குகளில், ஜப்பான் புகுஷிமா விபத்திற்கு பிந்தைய (இந்திய அணு உலைகள் பாதுகாப்பு குறித்த) வல்லுநர் குழு பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே, கூடங்குளம் அணு உலை செயல்படுத்தப்படும் என்று அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் எரிபொருள் நிரப்ப ஆணையம் அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சிக்குரியது..

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்காக பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் முறையாக வகுக்கப்படவில்லை என்றும், பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தாத நிலையில் கூடங்குளம் அணு உலையைத் திறக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அனுமதியானது நீதிமன்றத்தின் மாண்பையும் - நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதியியலின் சாராம்சமான 'வருமுன் காப்போம்' என்ற முக்கியக் கோட்பாட்டை முற்றிலுமாக புறந்தள்ளி விட்டு, கூடங்குளத்தில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அளித்த இந்த சர்ச்சைக்குரிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:

கூடங்குளம் அணு உலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதில் சட்டப்படியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு, அதன் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை காத்திருந்து செயல்பட வேண்டிய அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம், தன்னிச்சையாக முடிவு செய்து எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்துள்ளது நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் செயல் அல்ல. 

தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு, முறையற்ற வழியில் அணு உலையை செயல்பட வைக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.