சென்னை ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி இறந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பதில் தமிழக அரசு பெரும் மெத்தனம் காட்டுவதாக கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
ஸ்ருதி மரணத்தைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆறுமுகச்சாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை வகுத்து தாக்கல் செய்ய கூறியது குறித்து நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் எழுந்து, புதிய விதிமுறைகளைத் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்னும் கூடவில்லை என்றும், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதில் ஒப்புதல் வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே 2 முறை அவகாசம் தரப்பட்டுள்ளது. இப்போது 3வது முறையைக கேட்பதா என்று அவர்கள் கோபமாக கூறினர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. எத்தனையோ விஷயங்களுக்கு அவசரமாக அமைச்சரவை கூடி விவாதிக்கும் போது, மிக முக்கியமான விஷயத்துக்கு ஏன் இதுவரை அமைச்சரவைக் கூடவில்லை. இது முக்கியமான விஷயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லையா என்றும் கோபத்துடன் வினவினர்.
அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், தற்போது உள்ள பிரச்னைகளிலேயே மிக முக்கியப் பிரச்னையாக இதனைக் கருதி, விரைவில் வரைவு விதிமுறைகள் அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பதிலளித்தார். இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் அன்று கட்டாயம் வரைவு விதிமுறைளை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.
Social Plugin