Hot Posts

6/recent/ticker-posts

துணை ஜனாதிபதி தேர்தல்: ஜஸ்வந்த் சிங்கிற்கே ஆதரவு- ஜெயலலிதா அறிவிப்பு!!


துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து கொடநாடு சென்றார். அங்கிருந்து கொண்டே அரசு பணிகளை செய்து வந்தார். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி பிற்பகல் சென்னைக்கு வந்தார். அவரது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சங்மா சந்தித்து ஆதரவு கோரினார்.
அன்று மாலை சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். மறுநாள் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு அன்றே கொடநாடு திரும்பினார். இந்நிலையில் அவர் இன்று பகல் 12 மணிக்கு கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். வழிநெடிகி்லும் மற்றும் விமான நிலையத்திலும் அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அவர் பிற்பகல் 2 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தை வந்தடைந்தார். பின்னர் 3 மணிக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறுகையில், துணை ஜனாதிபதி தேர்தலில் அதிமுக ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கும் என்று அறிவித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.