Hot Posts

6/recent/ticker-posts

தவறான ஆபரேஷனால் பார்வை பறிபோனது கண் மருத்துவமனை மீது பிளஸ் 2 மாணவர் புகார்!!

கோவை ஆர்.எஸ்.புரம் குமாரசாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் (40), கூலி தொழிலாளி. இவரது மகன் விக்னேஷ் (17). ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படிக்கிறார். 

கடந்த 2006ம் ஆண்டு கண் புரை ஆபரேஷனுக்காக கோவையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு சென்றார். அவரது இடது கண்ணில் கண் புரை ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் பார்வை மங்க தொடங்கியது. இதையடுத்து 2 மாத இடைவெளிக்கு பின்னர் அதே மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் பலன் ஏற்படவில்லை. மாணவர் மற்றும் அவரது பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறினர். ‘கவலைப்படாதீர்கள், நல்ல பார்வை கிடைக்கும்‘ என கூறி மீண்டும் ஆபரேஷன் செய்தனர். இப்படி சொல்லி சொல்லியே, 4 ஆண்டுகளில் 5 ஆபரேஷன் செய்தனர். 

ஆனால் விக்னேசின் இடதுகண் பார்வை முற்றிலும் பறிபோய் விட்டது. இந்நிலையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் சட்டபேரவை மனுக்கள் குழுவிடம் மாணவர் விக்னேஷ் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது: எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். தவறான ஆபரேஷன் செய்து என் பார்வையை மருத்துவமனை நிர்வாகத்தினர் பறித்து விட்டனர். தவறை மறைக்க 5 முறை ஆபரேஷன் செய்துள்ளனர். 

கோவை அரசு மருத்துவமனையில் என் பார்வையை பரிசோதித்த போது மீண்டும் பார்வை கிடைக்காது, தவறான முறையில் ஆபரேஷன் நடந்திருப்பதாக கூறினர். ஒற்றை கண் மூலம் என்னால் படிக்க முடியவில்லை. தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.