Hot Posts

6/recent/ticker-posts

தமிழகத்திற்குத் தொடர்ந்து தண்ணீர் தர முடியாது.. கர்நாடக முதல்வரின் திடீர் முரண்டு!!!


கர்நாடகத்தின் கபிணி அணையிலிருந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. அதன்படி கர்நாடகமும் தண்ணீரைத் திறந்துள்ளது. ஆனால் இந்தத் தண்ணீர் தமிழகத்தை வந்தடைவதற்கு முன்பே தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என்று தனது ஒரிஜினல் முகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது அந்த மாநில அரசு.
இன்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில்,
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று காவிரியில் தினமும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த வருடம் பருவ மழை சரியாக பெய்யவில்லை. எனவே கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் தொடர்ந்து திறந்துவிட முடியாது.
19-ந்தேதி நடைபெறும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் இது பற்றி தெரிவிக்கப்படும். கர்நாடகத்தில் உள்ள யதார்த்த நிலையை புரிந்துகொண்டு காவிரி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என போராடுபவர்கள் அதை கைவிட வேண்டும். கர்நாடக விவசாயிகளும் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றார் ஷெட்டர்.
எதியூரப்பாவின் அடடே பேச்சு...
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட கர்நாடக அரசு சம்மதிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் முதல்வரும், மறுபடியும் முதல்வர் பதவிக்கு காத்திருப்பவருமான எதியூரப்பா கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் விடச் சம்மதித்து அணையைத் திறந்து, தண்ணீரும் போக ஆரம்பித்துள்ள நிலையில் அதுகுறித்து ஒன்றுமே தெரியாதது போல எதியூரப்பா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹசன் மாவட்டம் அரிசிகரே தாலுகாவில் வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட தனது ஆதரவு கோஷ்டியினரோடு வந்திருந்தார் எதியூரப்பா. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்துக்கு காவிரி நீர் விடுவது தொடர்பாக அரசு ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. வருகிற 15 மற்றும் 19-ந்தேதி மீண்டும் கூட்டம் நடத்தி, கர்நாடகத்தில் உள்ள நீரின் அளவை பரிசீலித்து அதன்பிறகு முடிவு செய்யப்படும். இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் விடுவது குறித்து மாநில அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றார் எதியூரப்பா.
உறவு பாதிக்கப்படாது - கெளடா 'பொறுப்பு' பேச்சு
இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில்,
காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு சந்தோஷம், கர்நாடக விவசாயிகளுக்கு கஷ்டம் என்று எதுவும் இல்லை. எந்த விதத்திலும் இரு மாநில விவசாயிகளின் நலனும் பாதிக்கப்படக் கூடாது. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.
இது இரு மாநிலங்களுக்கு இடையேயான விவகாரம். வருகிற 19-ந்தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் கூடுகிறது. அந்த கூட்டத்தில் இரு மாநில மக்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் நல்ல தீர்வு காண வேண்டும்.
கர்நாடகத்தில் குடகு, மண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. அதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எந்த முதல்வருக்கும் எதிராக மரபுகளை மீறி போராடுவது சரியல்ல. எக்காரணம் கொண்டும் அவ்வாறு போராட்டம் நடத்தக்கூடாது. அரசியல் சண்டையால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்றார் அவர்.
கபிணியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் விடப்படுவது குறித்து அவர் கூறுகையில், கபினி போன்ற சிறிய அணை வேகமாக நிரம்பி விடும். ஆனால், கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), ஹாரங்கி உள்ளிட்ட பெரிய அணைகள் விரைவாக நிரம்பாது. குறிப்பாக, வறட்சி காலத்தில் நீர் மட்டம் மிகவும் குறைந்து போய் விடும்.
தற்போது கபினி அணை பகுதியில் அதிக மழை பெய்வதால் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதனால் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால், கே.ஆர்.எஸ். அணையில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது என்றார் கெளடா.
கபிணி அணையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் கபிணி அணைப் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கபிணி அணையிலிருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதை கண்டித்து மைசூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் நாகேந்திரா தலைமையில் கபினி அணை அருகே காவிரி நீர் வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது நாகேந்திரா கூறுகையில், கர்நாடகத்தில் இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததால் கே.ஆர்.எஸ்.அணை, கபினி அணை இன்னும் நிரம்பவில்லை. மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இங்கே விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாத நிலையில் தமிழ்நாட்டுக்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும். எனவே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.