தென்கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள நீலம் புயல் கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உருவான இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.
காலை நிலவரப்படி நீலம் புயல் 300 கி.மீ. தொலைவில் கரையை நெருங்கி வருகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மணிக்கு 55 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசுகிறது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் அதிகரிக்கும். 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
இதில் மரங்கள், மின்சார கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள் சாய வாய்ப்பு உள்ளது. கூரைகள், விளம்பர போர்டுகளும் காற்றில் அடித்துச் செல்லப்படக் கூடும். கடல் சீற்றம் மேலும் அதிகரிக்கும். கடல் அலை 1 1/2 மீட்டர் உயரத்துக்கு எழும். சில இடங்களில் கடல் நீர் நிலத்திற்குள் உட்புக வாய்ப்பு உள்ளது.
எனவே கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதன் தாக்கம் 2 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும். எனவே கரையில் இருந்து 2 கி.மீ. தூரம் வரை உள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன், பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும்.
சென்னையின் தெற்கு பகுதியில் இருந்து மகாபலிபுரம் வரை புயல் கரையை கடக்கும் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு கன மழையும் கொட்டுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலும் கடலோர மாவட்டங்களிலும் புயல் நிவாரண கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு 24 மணி நேரமும் நிலைமை கண்காணித்து வருகிறார்கள்.
1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மழை வெள்ளம் குறித்த தகவல்கள் மற்றும் புகார்களை பதிவு செய்யலாம்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீன் வளத்துறையின் படகுகள் நீச்சல் வீரர்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வானிலை முன் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் 4 நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக் கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புயல் இன்று மாலை கரையை கடக்கும்போதும், கடந்த பின்பும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டும். புயலின் தாக்கம் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கு இருக்கும் என்றும் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி கடலூர் மாவட்டத்தை 'தானே' புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இப்போது 'நீலம்' புயலும் தானே புயல் போன்றதுதான் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.நிலம் புயல் முதலில் நாகப்பட்டினத்துக்கும், நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் கடலூர் அல்லது சென்னை நகரம் தாக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது வடக்கு மற்றும் மேற்கு திசையில் நகர்வதால் கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் புயல் தாக்கத்தில் இருந்து நாகை தப்பியது. கடலூரில் இருந்து சென்னை வரை உள்ள கடலோர பகுதியை புயல் தாக்குகிறது. மகாபலிபுரத்தை மையமாக கொண்டு கரையை கடப்பதால் அங்கு புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்யும். இதன் தாக்கம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், புதுவையிலும், நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Social Plugin