Hot Posts

6/recent/ticker-posts

நீலம் புயல் காரணமாக நாளையும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!!


வங்க கடலில் உருவான நீலம் புயல் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், உள்பட பல மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தஞ்சையில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மழையால் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் அழுகும் அபாயம் உள்ளது. 

கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், முத்துக்குடா, புதுப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது. நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் உருவானது. 

நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. 6-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புயல் இன்று கரையை கடப்பதால் கடற்கரை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே கடற்கரை மாவட்டங்களில் உள்ள  அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்து.