இடையில் சில நாள்கள் குறைந்திருந்த மின்வெட்டு மீண்டும் பிரம்மாண்டமாக
உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை தமிழக மாவட்டங்களிலிருந்து வரும்
செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையைத் தவிர அநேகமாக மற்ற எல்லா
மாவட்டங்களிலும் மின்சார சப்ளையின் நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டு
விட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 14 மணி நேரத்திற்கு மின்சாரம்
துண்டிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கோவை போன்ற பகுதிகளில் 60 சதவிகித
அளவிற்குமின் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிக்குக் காற்றாலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு
குறைந்துவிட்டதுதான் என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் இது
எதிர்பார்த்திருக்க இயலாத ஒன்றல்ல. பருவ நிலை மாறும்போது காற்றாலை மூலம்
கிடைக்கும் மின்சாரம் குறைவதும் இயல்பானது. இதை எதிர்பார்த்து மாநில அரசு
இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத்
தவறிவிட்டது.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக் காரணமாக சிறு தொழில்கள் கடந்த
இரண்டாண்டுகளாகமுடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்
சிறு குறுந்தொழில்கள் எண்ணிக்கையில் அதிகம். தலைகளைக் கொண்டு
கணக்கிட்டால் இங்குதான் சிறுதொழில்களில் செயப்பட்டுள்ள முதலீடும் அதிகம்.
மத்திய அரசின்சிறுதொழில்கள் நடத்திய சர்வே, சென்றாண்டு 1,500 கோடி ரூபாய்
அளவிற்கு சிறுதொழில்துறையில் இருந்த உற்பத்தி இந்தாண்டு 600 கோடி ரூபாய்
அளவிற்குக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கிறது. இந்த வீழ்ச்சி எத்தகைய
பொருளாதார நெருக்கடிகளைத் தனிமனிதர் வாழ்விலும், அரசிற்கும் ஏற்படுத்தும்
என்பது வெளிப்படை.
டீசல் ஜெனரேட்டர்களைக் கொண்டு இந்த நிலையைச் சமாளிக்க முடியாது.
அண்மையில் டீசல் விலை உயர்த்தப்பட்டதையடுத்து டீசல் ஜெனரேட்டர் மூலம் ஒரு
யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 23 ரூபாய் ஆகிறது என்று
சிறுதொழில்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். 20 சதவிகிதம் வரை
மின்பற்றாக் குறையை ஜெனரேட்டர் மூலம் சமாளிக்க முடியும்.
ஆனால் 60
சதவிகிதப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது என்கிறார்கள்அவர்கள்.
காவிரி நீர் வரத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாகவும், மற்ற ஆறுகளை மணல்
வாரும் ‘குவாரி’களாகவும், பிற நீர்நிலைகளைக் கட்டிடம் கட்டும்மனைகளாகவும்
ஆக்கிவிட்டதையடுத்து தமிழகத்தில் விவசாயம் ஏற்கெனவே பிரச்சினைகளை
சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் பல்வேறு பிரச்சினைகள்
காரணமாக மீன்பிடித் தொழில் நெருக்கடியில் உள்ளது. பஞ்சு நூல் இவற்றின்
விலை உயர்வு, பற்றாக்குறை காரணமாக நெசவுத் தொழிலிலும் ஒரு தேக்க நிலை
நிலவுகிறது.
தமிழக மக்களில் கணிசமானோர் வேளாண்மை, நெசவு, சிறு தொழில், மீன் பிடித்தல்
ஆகியவற்றைத்தான்தங்கள் வாழ்வாதரமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக்
கருத்தில் கொண்டு பார்க்கும்போது மனதில் ஒருவிதக்கலக்கம் ஏற்படுகிறது.
மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்.
உடனடித் தீர்வு, நீண்டகாலத் தீர்வு என்றுதிட்டங்கள் வகுத்துக்
கொண்டு செயலில் இறங்க வேண்டும். 10,120 மெகாவாட் திறன் கொண்ட 6 மின்
திட்டப் பணிகள் முழுமையடையாமல் முடங்கிக் கிடக்கின்றன எனச்
சொல்லப்படுகிறது. அவை சுணங்கிக் கிடப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து
அவற்றைச் சரி செய்ய வேண்டும்.
உறங்கிக் கிடந்த எரிமலைகள் உறுமிக் கொண்டிருக்கின்றன. எப்போது
வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதுதான் இன்றைய நிலைமை.
மின்சாரம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி இருக்கும் தமிழகத்தில் சிறு, குறு
தொழில் செய்பவர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள், அடித்தள மக்கள் ஒரு
கொதி நிலையில் இருக்கிறார்கள். காரணம், அவர்களின் வாழ்வாதாரமே ஆட்டம்
கண்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் மின்பற்றாக்குறையை, நீயா, நானா என்ற அரசியல்
பிரச்சினையாகவோ, நிர்வாகச் சீர்கேடாகவோ மட்டும் கருதவில்லை. அது அடித்தள
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைஎனக் கருதும் ஆராய்ச்சியாளர்கள் அடித்தள
மக்களிடம் பேசியபோது அவர்களிடம் ஒருவித சீற்றம் நிலவுவதை உணர முடிந்தது.
இருட்டில் தத்தளிக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நிலைமை
குறித்தும் ஒரு status report:
அதிரையின் நிலைமை :
கடந்த சில வாரங்களாக மின்வெட்டின் நிலைமை மிகவும் மோசமாக
உள்ளது. இம்மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 14 மணிநேரம் மின்வெட்டு
உள்ளது. அதிகாலை, மதியம், மாலை இரவு என எல்லா நேரத்திலும் மின்வெட்டு
உள்ளது . இம்மின்வெட்டினால் படிக்கும் குழந்தைகள், கல்லூரி மாணவ,
மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் மனக் குமுறல்கள் :
இப்படி பொழுதெல்லாம் மின்சாரத்த எடுத்துட்டா, நாங்க எப்படி
வயலுக்கு தண்ணி காட்டுவோம். மோட்டார் எப்படிப் பயன்படுத்த முடியும்?
மின்சாரத்துக்காக தினமும் காத்து இருக்க வேண்டியதுள்ளது. அதிக அளவில்
உற்பத்தி பாதிப்பு மற்றும் பயிர்களின் விளைச்சல் பாதிப்பும்
ஏற்பட்டிருக்கிறது" என்கிறார், விவசாயி வி.எம். ராஜூ.
காலை நேரத்தில்தான் கரண்ட் இல்லை. சரி, இரவு நேரத்தில் கண் விழித்து
உழைக்கலாம் என்று நினைத்தால் கூட இரவிலும் இதே கதைதான். இப்படி 14
மணிநேரம் மின்சாரத்தை நிறுத்தினால் நாங்கள் எப்படி உழைத்து, எங்கள்
குடும்பங்களைக் காப்பாற்றுவது?" என்று அதிரை நண்பர் ஒருவர் அப்துல் ரஹீம் கூறுகின்றார்.
தொடர் மின்தடையால் நெல் அரவை இதுவரை இல்லாத அளவு
பாதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் சுழற்சி முறைகளில்மின்வெட்டு
ஏற்படும். அதற்கேற்ப சமாளித்துக் கொள்வோம். ஆனால் தற்போது
முன்னறிவிப்பின்றி பல மணிநேரம் மின் தடைகள் ஏற்படுகின்றன. முன்பு
நாளொன்றுக்கு பெரிய ஆலைகள் என்றால் 500 மூடைகளும், சிறிய ஆலைகள் என்றால்
250 மூடைகளும் நெல் அரவை செய்யப்படும். தற்போதுமின்தடையால் 100 மூடைகள்
நெல் அரவை செய்வதே கடினமாக உள்ளது. இதனால் தினமும் பத்து லட்சம் ரூபாய்
வரை இழப்பு ஏற்படுகிறது" என்கிறார், அதிரையில் உள்ள நெல் அரவை உரிமையாளர் ஒருவர்.
இன்னொரு புறம் இயற்கை சார்ந்த மின்
உற்பத்தியைப் பரவலாக்க திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். மின்
விநியோகத்தில் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன்று தேவை செயல். வாக்குறுதிகள்அல்ல.
நன்றி
அஹமது ஆசிப் ,
(அதிரை குரல் நிருபர்,)
Social Plugin