Hot Posts

6/recent/ticker-posts

விடுதலை செய்ய வேண்டும்

நீண்ட சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாளில்
விடுதலை செய்ய வேண்டும்
சட்டமன்றத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ கோரிக்கை

தமிழக சட்டப்ரேவையில் இன்று (30.08.2016) மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் ஆகிய மானிய கோரிக்கையில் பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இரண்டாம் முறையாக பேசுகிறேன். அந்த வகையில் சிறுபான்மையினர் நலனும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனும் இணைந்த மானியக்கோரிக்கை இது.

அண்ணல் அம்பேத்கார் அவர்கள் அரசியல் நிர்ணய சபைக்கு செல்வதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்த இயக்கத்தின் சார்பாக நான் பேசுவதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன். எல்லா உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கக்கூடிய இன்றைய நிகழ்வில் சிறுபான்மையினருடைய மானியக் கோரிக்கை நிகழ்வு நடைபெறுவது மெத்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசிற்கு நன்றி

அறநிலைத்துறையின் அறிக்கையில் எனது தொகுதிகுட்பட்ட பண்பொழி திருமலைக்கோவில் பகுதியில் மின்சார விளக்குகள் இல்லை, அவற்றை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதை இந்த அரசு ஏற்று அதற்காக ரூ. 53 லட்சம் ஒதுக்கீடு செய்தமைக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போன்று உள்ளாட்சித் தேர்தல்கள்-நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி என மூன்றும் ஒரே அடிப்படையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம் அதையும் ஏற்று கொண்டமைக்கு எங்களுடைய நன்றி.

வக்ஃப் வாரியம்

மரியாதைக்குரிய பேரவை தலைவர் அவர்களே, சிறுபான்மையின சம்மந்தமாக பல்வேறு அறிவிப்புகள் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வக்ஃபு வாரியம் கடந்த ஆறு மாத காலமாக அமைக்கப்படாமல் வக்ஃபு சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது இருக்கின்ற சி.இ.ஒ. அவர்கள் அதிகாரத்தின் கீழ் அவற்றையெல்லாம் செய்ய முடியாது. எனவே விரைவாக வக்ஃபு வாரியத்தினை உருவாக்கித்தர வேண்டும் என இந்த அரசாங்கத்தை மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

அதே போல கட்டாய திருமண பதிவுச் சட்டத்தின் மூலமாக......

திரு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: விரைவாக காலி இடங்கள் நிறைவு செய்யப்பட்டு வக்ஃபு வாரியம் முறையாக செயல்படும் என அமைச்சர் அவர்கள் அறிவித்தமைக்கு மிக்க நன்றி.

காஜிகளுக்கு அங்கீகாரம்

கட்டாய திருமண பதிவுச்சட்டத்தின் மூலமாக சந்திக்கும் பிரச்சினைகள் பள்ளிவாசல்களிலே 1400 வருட காலமாக திருமணங்களை முஸ்லிம்கள் பதிவு புத்தகங்களிலே செய்து வருகின்றார்கள். இந்த கட்டாய திருமண பதிவுச் சட்டத்தின் மூலமாக பள்ளிவாசலிலே பதிவு செய்தாலும் மீண்டும் பதிவு அலுவலகத்திற்கு மணமகனும், மணமகளும் செல்லக்கூடிய சூழ்நிலை இருப்பதினாலே முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே அலைக்கழிக்கப்படுகின்றார்கள். இந்த முறையை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது.

காஜிகளுடைய சட்டத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்குக்கூடிய காஜிகளுக்கு கெஸட் ஆபிசர் அந்தஸ்தை வழங்கினால் அந்த பதிவு முறையே அரசு ஏற்றுக் கொண்டு பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால் முஸ்லிம் சமுதாயத்தினுடைய இந்த பிரச்சினை தீர்க்கப்படும். தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி

அதே போல ஏற்கனவே உறுப்பினர்கள் சில தகவல்களை சொன்னார்கள். வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி வழங்குவதிலே சில நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. அதை எளிமைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதையும் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
மையவாடிகளுக்கு இடம்
மையவாடிகள் பவ்லேறு பகுதிகளிலே இல்லாமல் இருக்கின்றது. அனைத்து சமுதாய மக்களுக்கும் இடுகாடுகள் வழங்குவது போல முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடுகாடு வழங்கினாலும் கூட சிலர் ஆட்சேபனை செய்வதினாலே அது கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை வேளச்சேரியில் 2013ம் ஆண்டு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தரமணி நூறடிச் சாலையில் இடம் ஒதுக்கப்பட்டு சர்வே எண்: 150 ன் கீழ் அனுமதி வழங்கப்பட்டும் கூட இதுவரை அங்கு இடுகாடு அமைக்கப்படாததன் காரணமாக தரமணியிலிருந்து அடக்கம் செய்வதற்கு இங்கே இராயப்பேட்டை மையவாடிக்கு எடுத்துக் கொண்டு வரக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
அதே மாதரி ஈரோடு மேவாத் கிராமத்திலேயும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு ஒப்புதல் கொடுக்காததால் அந்த சிரமங்கள் எல்லாம் பல்வேறு பகுதிகளில் இருப்பதால் வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் தயவு கூர்ந்து இதனை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட புகார்களை நீங்கள் துரிதமாக எடுத்தீர்கள் என்றால் அந்த கஷ்டங்கள் இருக்காது. ஏனென்றால் இறந்து விட்டார்கள் 8 கி.மீ., 6 கி.மீ. தூரம் தூக்கிக்கொண்டு வருவது என்பது நிறைய கஷ்டம்.  பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறீர்கள். இதையும் நீங்கள் கவனத்தில் கொண்டு இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்திதரவேண்டுமென்பதை இங்கே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
சிறைவாசிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவினுடைய பிறந்ததின விழா இப்போது வரவிருக்கின்றது. எனவே கருணையின் அடிப்படையில் பல்வேறு நிலைகளிலே நீங்கள் நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்திருக்கின்றீர்கள் அதுபோன்று இந்த வருடமும் கிட்டதட்ட 14 வருடத்திற்கும் , 20 வருடத்திற்கும் மேலாக அங்கே இருக்கக்கூடியவர்கள் அனைத்து சமுதாயத்தை சோர்ந்தவர்களும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 50 பேருக்கு மேல் இருக்கிறார்கள். 20 வருடம் அங்கே இருப்பதினால் எல்லோரும் இங்கே அம்மா அம்மா என்று நாம் அழைக்கிறோம். அப்பேற்பட்ட உள்ளம் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் அவர்களுடைய குழந்தைகளை பார்க்க முடியாத அளவிற்கு சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதையும் நீங்கள் கருத்தில் கொண்டு அவர்களில் யாரையெல்லாம் நீங்கள் கருணை உள்ளத்தோடு விடுதலை செய்ய முடியுமோ அதையும் வருகின்ற பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்ததின விழாவையொட்டி அவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்தி கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
வெளிநாடுவாழ் தமிழர் நல அமைச்சகம்
தமிழகத்தை சார்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கேரளா போன்ற மாநிலங்களில் வெளிநாடுவாழ் மக்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அங்கே பிரச்சினைகளை ஏற்பட்டால் அவைகளை தீர்க்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அது போன்று வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கென ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினால் நன்மையாக இருக்கும் என்பதையும் இங்கே கோரிக்கையாக வைக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.
அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆங்கிலம்
அரசு பள்ளிகளில் ஆங்கிலம் படிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கிட்டத்தட்ட 14 லட்சம் மாணவர்கள் இருக்கின்றார்கள். இதில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடத்தக்கூடிய பள்ளிக் கூடங்கள் அதிகமாக இருக்கிறது. எப்படி அரசு பள்ளிகளில் ஆங்கிலம் படிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கின்றதோ அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நீங்கள் ஆங்கிலம் படிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே தேசிய சிறுபான்மை ஆணையமும் இதற்காக பரிந்துரை செய்திருக்கின்றது. அரசு கல்வி துறை அனுமதி வழங்கினால் போதும்.
இடஒதுக்கீட்டில் பிரச்சினை
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, அதே போல சிறுபான்மை சமுதாயத்தில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்குண்டான இட ஒதுக்கீடு பிரச்சினை இருப்பது போல அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தாத தகுதியான முனைவர் பட்டம் பெற்ற அருந்ததியினருக்கு அரசு வேலை மறுக்கப்படுவதாகவும், எஸ்.சி. அருந்ததியினர்.......
திரு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: முடித்து விடுகிறேன்,வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம் என்றுதான் நான் சொன்னேன் கேரளாவைப்பற்றி சொல்லவில்லை. அங்கு அந்த அரசாங்கத்தில் அது இருக்கிறது. அதுபோல இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுடைய இடஒதுக்கீடு, அருந்ததியர் இடஒதுக்கீடுகளில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதையும் நீங்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதிதிராவிடருக்கு பட்டா
எனது தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை வட்டம் புளியரை தாட்கோ நகரிலே ஆதிதிராவிடர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டுகிறேன்.
எம்.எல்.ஏ.களுக்கு பயிலரங்கம்
திரு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள்: மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, ஒரே ஒரு விஷயம்தான் நான் ஒன்றும் யாரையும் குறை சொல்லவில்லை. பொதுவாக புதிய எம்.எல்.ஏ.களுக்கு ஒரு பயிலரங்கம் நடத்தக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். நம்முடைய எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் மொபைல் போன் வேலை செய்யவில்லை அங்கு டவரை  ஏற்படுத்தி பூஸ்டரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அவர்கள் கேள்விக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோர் பதில் அளித்தனர்.