‘‘பொது வாழ்க்கையில் உனக்கு தரப்படுகின்ற அம்புக் குத்துக்களையும் அன்பு முத்தங்களையும் சரி சமமாக ஏற்றுக் கொள்’’
1972ல் காயல்பட்டினம் நகர இளைஞர் முஸ்லிம் லீக் செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டதும், என் பெயர்
அச்சிடப்பட்டு தரப்பட்ட கடிதத்தாளில் இடம் பெற்றிருந்த வாசகம்தான் இது.
இந்த தத்துவத்தை அச்சிட்டு எனக்கு கற்றுத்தந்தவர் செங்கம் ஜே.ஏ.ஜப்பார்.
2016 ஜூலை மாதம் 21ம் நாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடசென்னை மாவட்டத் தலைவர் சகோதரர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், ‘இன்று உங்கள் குருவுக்கு 75வது பவள விழா ஆண்டு தொடக்கமாயிற்றே’ என்றார்.
கைபேசி இணைப்பின் மூலம் அவருக்கு வாழ்த்துக்கூறி பதிலுக்கு அவரிடத்திலிருந்து ஆசியும் பெற்றேன்.
45 ஆண்டுகள்!
என் வாழ்வில் முக்கால் பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்ட வரலாறு முஸ்லிம் லீகில் எனக்குள்ள தொடர்பு.
1970 அக்டோபர் 22ல் ‘காயிதேமில்லத் அவர்களை பார்ப்போம் குற்றாலம் வா’ என என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார் தியாகி பி.எச்.எம்.அப்துல் காதர்.
அதற்கு ஒரு காரணம் இருந்தது.
காயல்பட்டினத்தில் நான் படித்த எல்கே உயர்நிலைப்பள்ளியில் (இப்போது மேல்நிலைப்பள்ளி) காலை பிராத்தனை நிகழ்ச்சியில் வழக்கமாக ஏதாவது ஒரு பொன்மொழி சொல்வேன்; அவை பெரும்பாலும் திராவிடர் இயக்க தலைவர்களின் பொன் மொழியாகவே இருக்கும்.
ஒருநாள் ‘சாதலும் தமிழ் படித்துச் சாதல் வேண்டும்; என் சாம்பலும் தமிழ் மணக்க வேதல் வேண்டும்’ என கூறினேன்.
பள்ளி முடிந்ததும் என்னுடைய ஆசிரியர்கள் ஓ.ஏ.ஷேக்மீரான், ஏ.சி.சயீதுல்லாஹ் ஆகியோர் என்னை அழைத்து ‘ஏனப்பா இப்படி பேசுகிறாய்? மார்க்க கருத்துக்களை சொல்’ என அறிவுரை பகன்றனர். முன்னவர் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர், இரண்டாமவர் உடன்குடியைச் சேர்ந்தவர். இருவரும் முஸ்லிம் லீகின் மீது பற்றாழமிக்கவர்கள் என்பதால் என்னை அழைத்துக் கொண்டு முஸ்லிம் லீகர்களிடம் சென்று, ‘ஆர்வம் இருக்கிறது; ஆனால் நாத்திக பாதையில் பயணிக்கிறான் அறிவு புகட்டுங்கள்’ என கூறினர். அந்த அறிமுகமே குற்றாலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவரை நான் செல்ல காரணமாக அமைந்தது. இந்த கூட்டத்தில்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஒருநாள் பாடம் நடத்திய எனது ஆசிரியர் தேவ இரக்கம் ஞானசிகாமணி, ‘வைக்கோல் எப்படி கிடைக்கிறது?’ என்று என்னிடம் கேட்ட போது, ‘‘அது ‘நெல் மரத்திலிருந்து’ கிடைக்கிறது’’ என நான் சொன்ன பதிலால் சக மாணவர்கள் சிரிக்க பொது அறிவை வளர்க்க நூலகங்களை நாடினேன்.
காயல்பட்டினம் பொது நூலக வாசகர் வட்ட செயலாளராக 1971லேயே பொறுப்பேற்றேன்.
மஹ்பூபு சுபுஹானி சங்கம், இஸ்லாமிய இளைஞர் இயக்கங்களில் சொற்பயிற்சி மன்றங்கள் தொடங்கி நடத்தினேன். இந்த காலகட்டத்தில்தான் தென்காசி மேடை முதலாளி மு.ந.அப்துல் ரஹ்மான் சாகிப் முன்னிலையில் என் முதல் பொது மேடை பேச்சு அரங்கேறியது. அது சமுதாய நிகழ்ச்சி.
1971ல் இளைஞர் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் வேகமடைந்தன. பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்திற்கு கடையநல்லூர் க்ஷி.கி.வி.இக்பால் அமைப்பாளர். கன்னியா குமரி மாவடத்திற்கு குளச்சல் ஸி.றி.வி.ஷாகுல் ஹமீது அமைப்பாளர்.
காயல்பட்டினத்தில் இளைஞர் முஸ்லிம் லீகை அமைக்க என்னிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. வாஹித் ரேடியோ ஹவுஸில் நடந்த அந்த நேர்காணலை நடத்தியவர் அதன் உரிமையாளர் மர்ஹும் ஷி.மி.வி.ஹனிபா. அவர்தான் அன்று நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர். நேர்காணல் நடைபெற்றபோது எனது வலது புறம் மர்ஹும் கே.எம்.கே.காதர் சுலைமான் இடதுபுறம் மர்ஹும் எம்.கே.எஸ்.ஏ.தாஹிர்! பின்னாட்களில் அவர்கள் இருவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு நகரச் செயலாளர்களாக வந்தவர்கள். நேர்காணலில் நான் அமைப்பாளராக தேர்வானேன்.
1972 காயல்பட்டினம் நகர இளைஞர் முஸ்லிம் லீக் செயலாளராக நான் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 1972 ஏப்ரல் 5 அன்று காலமானார்.
அவரது மறைவுச் செய்தியையும் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் பற்றியும் கூம்புக்குழாய் பொருத்தப்பட்ட குதிரை வண்டி மூலம் காயல்பட்டனத்தில் அறிவிப்புச் செய்தேன்.
தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். அடியோடு நீக்கப்பட்டதாக தி.மு.க. பொதுக்குழு 1972 அக்டோபர் 14ல் தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து 18.10.1972ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அந்த பரபரப்பான கால கட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டங்கள் அடுத்தடுத்தோ அல்லது ஒரே நாளிலோ நடக்கும்.
எம்.ஜி.ஆரை எதிர்த்து தி.மு.க. கூட்டம் காயல்பட்டினம் ஆஸாத் தெருவில் நடைபெற்றது. அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பேச அழைக்கப்பட்டவன் நான்.அனல் பறக்க அன்று நான் பேசிய பேச்சுதான் என் முதல் அரசியல் மேடை பேச்சு. ஊர் முழுக்க நான் பரபரப்பாக பேசப்பட்டேன்.
1973 ஜனவரி 18 வியாழக் கிழமை காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இளைஞர் முஸ்லிம் லீகின் முதலாவது பொதுக்கூட்டம்.
மௌலானா ஷி.ஷி.கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி தொடக்க உரை யாற்றினார்.
நெல்லை மாவட்ட இளைஞர் முஸ்லிம் லீக் அமைப்பாளர் க்ஷி.கி.வி. இக்பால், துணை அமைப்பாளர் காயல் மகபூப், சிராஜ் மாத ஏடு ஆசிரியர் கடைய நல்லூர் ஷி.ஹி.அப்துல்ஹை ஆகியோர் உரையாற்றியபின் இளைஞர் முஸ்லிம் லீக் மாநில அமைப்பாளர் செங்கம் ஜே.ஏ.ஜப்பார் சிறப்புரையாற்றினார்.
‘அஞ்சி மனம் சோர்ந்தவர் வாழ்ந்ததே இல்லை; அன்பு சேவை செய்தவர் வீழ்ந்ததே இல்லை’ என தொடங்குகினார்.
புயலின் வேகமும் அல்ல & தென்றலின் தாலாட்டும் அல்ல. ஒரு புதுவகையான பாணி. ஆனால் எவரையும் கவர்ந்திழுக்கும் பேச்சு, சபாரி உடை, பிறை நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தொப்பி, இவை செங்கம் ஜப்பாரின் அடையாளம்.
மர்ஹும்களான ஜானி சாகிப், பாத்திமாபீ தம்பதியரின் புதல்வர்தான் ஜே.ஏ.ஜப்பார். இத்தம்பதிக்கு 3 ஆண்கள் 3 பெண் மக்கள் இதில் 4வது பிள்ளையாக 1942 ஜூலை 21ல் பிறந்தவர் ஜே.ஏ.ஜப்பார்.
அன்றைய வடஆற்காடு, இன்றைய திரு வண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர் செங்கம். இந்நகரிலுள்ள பழைய போலீஸ் லைனில் தான் இவர் வீடு. வீட்டிலேயே சாந்தி அச்சகம். சகோதர்களுக்கு மும்தாஜ் ஸ்டோர் என்ற துணிக்கடை.
7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த செங்கம் ஜப்பார் 15 வயதிலேயே முஸ்லிம் லீகால் ஈர்க்கப்பட்டவர்.
திருச்சியில் 1958 ஜனவரி 11, 12 இரு நாட்கள் முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தான் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதன் அமைப்பாளராக அல்லாமா அமானி ஹஜ்ரத் அவர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.
இந்த மாநாடு பற்றி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் அவர்கள் நடத்தி வந்த ‘மணிவிளக்கு’ மாத ஏட்டின் முகப்பு அட்டையில் காயிதேமில்லத் படத்தையும், ‘லீக்கின் கொடியை தூக்கிப் பிடிப்போம்’ என்ற சொற்றொடரையும் இடம் பெறச் செய்திருந்தார்.
அந்த இதழின் எழுத்தாக்கத்தில் கவரப்பட்ட செங்கம் ஜே.ஏ.ஜப்பார், திருச்சி மாநாட்டிற்கு பணவிடைமூலம் மூன்று ரூபாய் நாற்பது பைசா அனுப்பி வைத்தார். இதில் 2 ரூபாய் வசூலித்தது 1 ரூபாய் 40 காசுகள் அவருடையது. இதுதான் முஸ்லிம் லீகில் அவரது முதல் ஈடுபாடு.
இம்மாநாட்டைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி செங்கத்தில் சிறப்பான முறையில் ஊர்வலத்துடன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தை நடத்தினார் ஜே.ஏ.ஜப்பார். அப்போது அவருக்கு வயது 16. இக்கூட்டத்தில் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனார், மறுமலர்ச்சி நாவலர் ஏ.எம்.யூசுப் இருவரும் சிறரைப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து செங்கத்திலிருந்து மணிவிளக்கு முகவரிக்கு தொடர் கடிதங்கள் எழுதி தொடர்பு ஏற்படுத்தி வந்தார் ஜே.ஏ.ஜப்பார்.
1960 செப்டம்பர் 17, 18 தேதிகளில் சென்னையில் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சென்ற இடத்தில்தான் காயிதே மில்லத் அவர்களிடம் செங்கம் ஜப்பார் அவர்களை அறிமுகம் செய்து வைத்தனர் சாரண பாஸ்கரனாரும், பி.என்.ஐ.அபூதாலிப் அவர்களும். அம்மாநாட்டிற்கு வருகை தந்திருந்த மகாராஷ்டிர மாநில முஸ்லிம் லீக் தலைவர் நூர் முகம்மது சேட் அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு செங்கம் ஜப்பாருக்கு தரப்பட்டது.
இந்த அறிமுகம் செங்கம் ஜப்பார் அவர்களுக்கு கட்சியில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
1961 ஜனவரியில் 11ல் செங்கத்தில் ரூ.800 மட்டுமே செலவிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு நடத்தினார் ஜே.ஏ.ஜப்பார். இந்த மாநாட்டில் காயிதே மில்லத், சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் தளபதி திருப்பூர் முகைதீன், சேலம் டி.அப்துல் பாஸித் பள்ளப்பட்டி மணிமொழி மௌலானா கலீலுர் ரஹ்மான், அப்துல் ஜப்பார் நயீமுல் மஸ்ரிகி ஆகியோர் உரையாற்றினர்.
இந்த மாநாட்டின் மூலம் தலைவர்களுடன் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
இந்த மாநாடு முடிவடைந்ததும் காயிதே மில்லத், சிராஜுல் மில்லத் இருவரையும் செங்கம் முதல் திருவண்ணாமலை வரையிலான 30 கி.மீட்டர் தூரத்திற்கு திரீரோஸஸ் தேயிலை நிறுவன வேன் மூலம் ஏற்றிச் சென்று, திருவண்ணா மலையிலிருந்து சென்னைக்கு வி.எம்.சர்வீஸ் பேருந்து மூலம் அனுப்பி வைத்தார். பேருந்து கட்டணம் 3 ரூபாய் 20 காசுகள்.
பேருந்தில் காயிதேமில்லத் இருப்பதை அறிந்து கொண்ட ஓட்டுனர் குரோம்பேட்டையில் பேருந்தை நிறுத்தி காயிதேமில்லத்தை இறக்கிவிட்டு பின்னர் பிராட்வேயில் சிராஜுல் மில்லத்தை இறக்கினார்.
எவ்வளவு பெரிய தலைவர்கள்! கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியுமா இந்த எளிமையை?
செங்கம் மாநாட்டிற்குப்பின் ஜே.ஏ.ஜப்பாரின் நடவடிக்கைகள் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற ரீதியில் வேகம் எடுத்தன. கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு கொண்டார். அடிக்கடி சென்னை வரத் தொடங்கினார்.
1961 நவம்பர் 22 அன்றுதான் சென்னை மரைக்காயர் லெப்பை தெரு 8ம் எண் (இன்று 36ம் எண்) கட்டடம் வாங்கப்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் 11 அன்று கட்சியின் அதிகாரபூர்வ வாரஏடாக ஏ.கே.ரிபாயி சாகிபை ஆசிரியராகக் கொண்டு ‘உரிமைக்குரல்’ தொடங்கப்பட்டது.
1962ல் தி.மு.கழகம் தனி திராவிடநாடு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தது. அக்கட்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டு சேர்ந்து நாட்டின் மூன்றாவது பொதுத் தேர்தலை சந்தித்தது.சட்டப்பேரவை தொகுதிகள் ஆறும், நாடாளுமன்ற தொகுதிகள் இரண்டும் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டன.
வடசென்னை நாடாளு மன்ற தொகுதி யில் போட்டியிட்ட சிராஜுல் மில்லத் சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பிழந்தார். நாகை நாடாளுமன்ற தொகுதியில் தளபதி திருப்பூர் ஏ.எம்.முகைதீன் போட்டியிட்டார். அவருக்கு அம்பாஸிடர் காருடன் சென்று ஒரு மாதம் தங்கி வேலை செய்தார் ஜே.ஏ.ஜப்பார். அப்போது ஒரு நாள் கார் வாடகை ரூ.15 டிரைவர் படி ரூ.3 ஆக ரூ.18 மட்டுமே!
1968ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக வரலாற்றில் துரதிருஷ்டவசமாக சிறு விரிசல் ஏற்பட்டது. சிற்சில கருத்து வேறுபாடுகளால் சிலர் பிரிந்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு செங்கம் ஜப்பார் பதிலளித்த விதம் தமிழகம் முழுவதும் அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தது.
1969ல் இளைஞர் முஸ்லிம் லீகை ஆரம்பித்து அதற்காக ‘இளைய சமுதாயம்’ வார ஏட்டையும் செங்கத்திலிருந்து தொடங்கினார் ஜே.ஏ.ஜப்பார். 1971&72ல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இளைஞர் முஸ்லிம் லீக் துவக்கப்பட்டது.
1972 ஏப்ரல் 5 அன்று கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் மரணமடைந்தபின் 1972 மே 14 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக சையத் அப்துல் ரஹ்மான் பாபக்கி தங்ஙள் அவர்களும் தமிழக தலைவராக
கே.எஸ்.அப்துல் வஹாப் ஜானி சாகிப் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
பாபக்கி தங்ஙள் அவர்கள் 1973 ஜனவரி 19ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை புனித மக்காவில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, 1964 முதல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இபுராகிம் சுலைமான் சேட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1973 ஜூன் 9, 10 தேதிகளில் சென்னை யில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தலைவர்களின் உருது மொழி பேச்சுக்களை தமிழாக்கம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார் ஜே.ஏ.ஜப்பார்.
அப்போதெல்லாம் இளைஞர் முஸ்லிம் லீகினர் சென்னையில் ஒன்று கூடுமிடமாக இருந்தது மண்ணடி மூர் தெரு சந்திப்பில் இருந்த காசிம் நியூஸ் ஏஜென்ஸி கடைதான்.
1974 ஜூலை திருப்பூரில் இளைஞர் முஸ்லிம் லீகின் மாநாடு வரலாறு படைக்கும் விதத்தில் நடைபெற்றது. கே.எஸ்.அப்துல் வஹாப் ஜானி சாகிப் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிம்ம கர்ஜனை புரிந்த தளபதி திருப்பூர் முகைதீன், (என் பெயர் குறிப்பிட்டு) எங்களின் வீர உரைகளை மிகவும் புகழ்ந்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள கிளையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் சமரசம் செய்ய சென்றிருந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத், எஸ்.ஏ.காஜா முகைதீன் ஆகியோர் தாமதமாக வந்து இம்மாநாட்டில் உரையாற்றிய போது என் தம்பிகளின் வீர உரைகளை கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என வருந்தினார்.
அதே ஆண்டு கடைசியில் செங்கத்தில் இளைஞர் முஸ்லிம் லீக் மாநாடு. லால்பேட்டை ஏ.எம்.முஹிப்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிறைக்கொடி ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கினார் ஜே.ஏ.ஜப்பார். அந்த மாநாட்டில் சிராஜுல் மில்லத், சொல்லின் செல்வர் எம்.எம்.பீர்முகம்மது உள்ளிட்ட தலைவர்கள் எங்கள் உரைகளுக்கு மனம் நிறைந்த பாராட்டை வழங்கினர்.
1975 பிப்ரவரி 14 சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவராக சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இளைஞர் முஸ்லிம் லீகிற்கு அங்கீகாரம் கிடைத்தது சிராஜுல் மில்லத் அவர்கள் தலைவரான பின்னர்தான். அதன் மாநில, மாவட்ட அமைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.
10.5.1975 ஞாயிறு காலை 11 மணி சென்னை மரைக்காயர் லெப்பை தெருவின் 8ம் எண் (இன்றைய 36) கட்டடமான கே.டி.எம்.ஏ. மன்ஸிலில் (இன்றைய காயிதே மில்லத் மன்ஸில்) இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் அவர்கள் தலைமையில், தேசிய தலைவர் மஹ்பூபே மில்லத் இபுராகிம் சுலைமான் சேட் முன்னிலையில் இளைஞர் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் தேர்தல்.
இளைஞர் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தலைவராக சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் சாகிப், பொதுச் செயலாளராக செங்கம் தந்த சிங்கம் ஜே.ஏ.ஜப்பார், பொருளாளராக காயல் மகபூப், துணைத் தலைவராக சத்தியமங்கலம் எஸ்.ஏ.அஸ்கர் அலி, துணைச் செயலாளர்களாக லால்பேட்டை ஏ.எம்.முஹிப்புல்லாஹ், குளச்சல் ஆர்.பி.எம்.ஷாகுல் ஹமீது ஆகியோர் ஒருமனதாக தேர்வு பெற்றோம்.
செங்கம் சாந்தி அச்சகத்தில் அச்சிடப் பட்டு வந்த ‘இளைய சமுதாயம்’ வார ஏட்டை சென்னையிலிருந்து வெளியிட முடிவு செய்து ஐஸ் ஹவுஸ் டாக்டர் நடேசன் சாலையில் மஹபூப் அச்சகம் தொடங்கப்பட்டு பின்னர் 123, அங்கப்ப நாயக்கன் தெருவுக்கு மாற்றப்பட்டது.
இளைய சமுதாயத்திற்கு செங்கம் ஜப்பார் ஆசிரியர், லால்பேட்டை ஏ.எம். முஹிப்புல்லாஹ் உதவி ஆசிரியர், காயல் மகபூப் அச்சிடுபவர், சத்தியமங்கலம் அஸ்கர் அலி வெளியீட்டாளர்.
‘போராடும் இனத்தின் போர்வாள்’ என்ற முத்திரை சொல்லுடன் வெளிவந்த இளைய சமுதாயத்தில் இளைய தலைமுறையின் உணர்வுகளை தட்டியெழுப்பும் கட்டுரைகள் வெளிவந்தன.
ஊர்கள் தோறும் இளைஞர் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள், மாவட்டம் தோறும் ‘முஜாஹிதீன் அரங்குகள்’. சமுதாயப்பணிகளுக்கு சிலிர்த்தெழுந்த சிங்கங்களாக தளபதிகள் அடையாளப்படுத்தி காட்டப்பட்டனர்.
லால்பேட்டை ஏ.எம்.முஹிப்புல்லாஹ், கடையநல்லூர் வி.ஏ.எம்.இக்பால், காயல் மகபூப், குளச்சல் ஆர்.பி.எம்.சாகுல் ஹமீது, செஞ்சி சத்தார் என்ற டாக்டர் சையத் சத்தார், சத்திய மங்கலம் அஸ்கர் அலி, கே.எம்.இஸ்மாயில், காரை முபாரக், கவிஞர் கிளியனூர் அஜீஸ், கண்ணமங்கலம் ஹுசைன் தாஸன், வீரை இஸ்மாயில், இஸ்மத் இனூன், மயிலை ஜலால், நேதாஜி நகர் யாஸீன், காயல்பட்டினம் வாவு சம்சுத்தீன், லால்பேட்டை ஹஸனுத்தீன், ரியாஸுல்லாஹ், ஆடுதுறை தளபதி ரஹ்மத்துல்லாஹ், சீனி அப்துல் கனி ....... இந்த பட்டியல் மிக நீளம்.
எழுத்து, பேச்சு, செயல் என இவர்களை பிரகாசிக்கச் செய்ததோடு அவர்களை தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தினார். இதைப்பற்றி லால்பேட்டை கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லாஹ், ‘எங்களின் முகத்தை நாங்களே அறியாதிருந்த காலத்தில் எங்கள் முகவரியை ஊர் அறியச் செய்தவர்’ என குறிப்பிட்டார்.
ஒரு பைசா கூட இல்லாமல் ஒரு காரியத்தை செய்து முடிக்கும் துணிச்சலும், எந்த திட்டமிடலும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை நடத்தி முடிக்கும் ஆற்றலும் செங்கம் ஜப்பாருக்கு கை வந்த கலை.
1975ல் கேரள கேசரி சி.எச்.முஹம்மது கோயா அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்ததை இவர் மறக்க, கோயா சாகிப் நாட்குறிப்பில் குறித்து வைத்தபடி ரயிலில் புறப்பட்ட செய்திவர நாங்கள் சென்னையில் இருந்தோம்.
யார் கையிலும் காசு இல்லை.
இரவுநேரம். சென்னையிலிருந்து திருப்பத்தூர் வரை பஸ் டிக்கட்டிற்கு மட்டும்
மண்ணடியில் ‘வசூலித்து தந்து’ கோயா சாகிபை அழைத்து வர என்னை அனுப்பினார்.
நான் திருப்பத்தூர் சென்று அங்கு வாகனங்களில் தொண்டர்களை அழைத்துக் கொண்டு ஜோலார்பேட்டை சென்று சி.எச்.கோயா சாகிபை அழைத்து கொண்டு செங்கம் வந்து துக்காபேட்டையில் கூட்டம் நடத்தினோம். அவரது மலையாள பேச்சை செங்கம் ஜப்பாரே மொழி பெயர்தார். அப்போது கோயா சாகிப் நாடாளுமன்ற உறுப்பினர் சி.எச்.கோயா சாகிப் கேரள கல்வி அமைச்சராக இருந்தபோது 1979 ஜூலை 7 அன்று காயல்பட்டினம் முஹிய்யத்தீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை திறக்கவும் அவரை நானே கேரளா சென்று அழைத்து வந்தேன். ‘அதே ஆண்டு அக்டோபர் 12ல் கேரள முதல்வர் ஆனார் சி.எச்.கோயா.
நாங்கள் தலையெடுத்த நேரம் இந்திய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள்.
1975 ஜுன் 26 அன்றுதான் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்து. அதனை எதிர்த்த தி.மு.க. ஆட்சி 31.1.1976ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
1977ல் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க., மார்க்ஸிஸ்ட் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 10 இடங்களில் போட்டியிட்டது. தென்காசி தொகுதியில் தராசு சின்னத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட செங்கம் ஜப்பார் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சமுதாய உணர்வில் ஊண், உறக்கத்தை தொலைத்திருந்த ஜே.ஏ.ஜப்பார், உத்திர பிரதேசம் முராதாபாத் கலவரம் குறித்து கண் கலங்கினார். கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கூட தரமறுத்த அரசின் செயலைக் கண்டு வெகுண்டெழுந்தார்.
அப்போது மெரார்ஜி தேசாய் பிரதமர். கலவர பகுதிகளை பார்வையிட அவர் செல்லவில்லை. ஆனால், இந்திரா காந்தி சென்றார்.
எனவே 1978 பிப்ரவரி 17ல் கும்பகோணம் கும்ப மேளாவிற்கு வருகைதரும் மொரார்ஜி தேசாய்க்கு கருப்புக் கொடி காட்டுவதாக அறிவித்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
செங்கம் ஜப்பார் அவர்களின் தயாள குணத்தை நேரில் பார்ப்பவர்கள் ஆச்சரியப் படாமலிருக்க மாட்டார்கள்.
கையில் காசு இருக்காது, நாள் முழுக்க பட்டினி, மாறுநாளும் பட்டினி திடீரென பணம் வரும் வயிறுபுடைக்க உண்ண மாட்டார். ஏதாவது தேவைக்காக இவரிடம் வந்து நின்றால் வந்த பணத்தை கேட்டவருக்கே கொடுத்து விடுவார்.
இளைஞர்களை எழுச்சி பெறவைத்த ஜே.ஏ.ஜப்பார் 1979 ஆகஸ்ட் 14 அன்று முதல் 6 ஆண்டு காலத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து நீக்கப்பட்டார்.
1980 மே 28 அன்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திருச்சி 2வது தொகுதியில் போட்டியிட்ட முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பின்னர் அவர் முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இளைஞர் முஸ்லிம் லீக் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியானது.
அதன் பின்னர் பேராசிரியர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலாச்சார செயலாளராகவும், அதனைத் தொடர்ந்து அமைப்பு செயலாளராகவும், பொதுச் செயலாளராகவும், சிராஜுல் மில்லத் மறைவுக்குப்பின் 1999 மே 19ம் அன்று தமிழ்நாடு மாநில தலைவராகவும், 2008 செப்டம்பர் 14 அன்று தேசிய பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முனீருல் மில்லத் அவர்களின் அற்புத வழிகாட்டலில்தான் எனது அரசியல் பயணம் தொடர்கிறது.
1986ல் என் திருமணம் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் அவர்கள் தலைமையில் காயல்பட்டினத்தில் நடந்த போதுகூட நான் ஜே.ஏ.ஜப்பாரை அழைக்கவில்லை.
1987ல் எம்.ஜி.ஆர். அவர்கள் செங்கம் ஜப்பார் அவர்களை பால்வளத் தலைவராக்கிய போது கூட நான் அவரிடம் தொடர்பு வைத்திருக்கவில்லை.
எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகாலமாக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்த நான் அந்த வழக்கிற்காக அவர் உதவியை நாடவில்லை.
அப்படிப்பட்ட நிலையிலும் 1995ல் நான் குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறை வைக்கப்பட்டிருந்த போது இன்றைய மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானை அழைத்து வந்து என் விடுதலை கோரி பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் ஜே.ஏ.ஜப்பார்.
1997ல் சக்தி வாய்ந்த ரெயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு (ஸி.ஸி.ஙி.) உறுப்பினரான நிலையில் கூட பிழைக்கத் தெரியாதவர் என்ற பெயரையே எடுத்தார்.
புகழ்பெற்ற முகலே ஆஜம் இந்தி திரைப்படத்தை தமிழாக்கம் செய்து ‘அனார்கலி’ என்ற பெயரில் வெளியிட்ட ஜே.ஏ.ஜப்பார், 2007ல் அதன் இசை குறுந்தகடு வெளியீட்டு விழாவை சென்னை கலைவாணர் அரங்கில் எம்.எஸ்.விஸ்வநாதன் தலைமையில் நடத்தினார். அதில் உரையாற்றிய கவிக்கோ அப்துல் ரஹ்மான், ‘செங்கம் ஜப்பார், உங்களுக்கு இந்த துறை சரிப்பட்டு வராது சமுதாய அரசியல் பாதையில் மீண்டும் பயணியுங்கள்’ என்றார்.
நீண்ட காலத்திற்குப்பின் நான் ஜே.ஏ.ஜப்பார் அவர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியது எங்கள் இருவருக்கும் நண்பரான தென்னக ரயில்வே அதிகாரி விழுப்புரம் எஸ்.அல்லா பக்ஷ் புதல்வரின் திருமணம் 2013 ஆகஸ்ட் 16 அன்று திருச்சியில் நடைபெற்றபோதுதான்.
வரலாறு சொல்லிக் காட்டப்படுவது பெருமைப்பட அல்ல; நன்றி பாராட்ட.
‘மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்’ என்பது நபிமொழி.
16 வயதிலேயே என் முகவரியை ஊர்அறியச் செய்தவர் ஜே.ஏ.ஜப்பார். அவர் பவள விழாவில் நான் நன்றி பாராட்டுகிறேன்.
காயல்பட்டினத்தில் நான் 18 வயதுடை யவர்களுக்கு முஸ்லிம் லீகை அடையாளம் காட்டி, சிராஜுல் மில்லத் அவர்களிடம் அறிமுகப்படுத்தினேன். அந்த அறிமுகம் அவர்களை உச்சத்தை தொடவைத்தது.
மனிதர்களுக்கு மரணம் நிச்சயம்; ஆனால் வரலாறு நிலைத்து நிற்கும். வரலாறை மறைக்க முயலும்போது அதனை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
முகவுரையுடன் தொடங்கிய இதனை முடிவுரை இல்லாமல் முடிப்பதா?
குருவுக்கு சிஷ்யன் அறிவுரை சொல்லக் கூடாது “தேனீர் டம்ளரில் இருந்தால்தான் மரியாதை. விலை உயர்ந்த அழகான படிக்கன் ஆயிற்றே என அதில் ஊற்றினால் தேனீர் மதிப்பிழந்து விடும். தேனீராகிய நீங்கள் இருக்க வேண்டிய இடம் எது-?”
-& 1973 ஜனவரி 19 வெள்ளிக்கிழமை மாலை கடையநல்லூரில் நான் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் இப்படி கேட்டவர் செங்கம் ஜே.ஏ.ஜப்பர்.
இந்த கேள்வி அவருக்கே சமர்ப்பணம்.....
Social Plugin