Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் ரயில் நிலயத்தை அதிகாரி ஆய்வு

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே உயர் அதிகாரி ஆய்வு ! ( படங்கள் )  அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 19 தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடர்பாக தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியியாளர் பி. செல்வம், உதவி பொறியாளார் எட்வின் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் விவேகானந்தம், லாசர், வேணுகோபால், ஏ.ஆர் வீராசுவாமி, சமூக ஆர்வலர்கள் கேஎஸ்எச் சுல்தான் இப்ராஹீம் ( சூனா ஈனா ), எஸ்.எஸ் பர்கத் அலி, சேக்கனா நிஜாம், மணிச்சுடர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் அதிகாரிகளை சந்தித்து திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பணிகளை விரைந்து முடித்து தர கோரிக்கை விடுத்தனர். திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிக்காக பட்டுக்கோட்டை முதல் முத்துப்பேட்டை வரையில் உள்ள தூரத்தில் உள்ள தண்டவாளப் பகுதியில் 4 கட்டங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிக்காக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உதவி பொறியியாளர் தலைமையில் சிறப்பு அலுவலக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2 அடி உயரத்திற்கு மண் நிரப்பும் பணி, இரண்டாவது கட்டமாக 2 அடி உயரத்தில் கிராவல் மற்றும் மணல் கலவை நிரப்பும் பணி, மூன்றவது கட்டமாக 1 அடி உயரத்தில் ஜல்லி நிரப்பும் பணியும், இறுதியில் ஸ்லீப்பர் கட்டைகள், தண்டவாளங்கள் அமைக்கும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கட்டப் பணிகள் முடிந்த பிறகு எலெக்ட்ரிகல் பணியும், சிக்னல் அமைக்கும் பணி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் மண் நிரப்பும் பணிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரி, அமரிக்குளம், புனல் குளம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மண் தர பரிசோதனைக்காக நாக்பூர் ஐஐடி பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவு பெறப்பட்டுள்ளது எனவும், ஆனாலும் மண் எடுப்பதில் அரசு தரப்பிலிருந்து முறையாக அனுமதி கிடைக்காததால் இந்த பணி நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் கிராவல், மணல் கலவை தயாரிக்கும் பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலத்திலிருந்து கலவை இயந்திரம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வந்ததுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 80 சதவீத கிராவல் மற்றும் 20 சதவீத மணல் நிரப்பி கலவை தயாரிக்கப்பட உள்ளது. இந்த பணிக்காக ஊழியர்கள் இயந்திரத்தின் பகுதிகளை பொருத்தும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் பணிகள் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் - காரைக்குடி வரை 143 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளுக்காக ரூ. 1300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருவாரூர் - பட்டுக்கோட்டை வரை 73 கிலோ மீட்டர் தூரத்தை வரும் வருடம் 2017 மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கும், பட்டுக்கோட்டை - திருவாரூர் வரை உள்ள 67 கிலோ மீட்டர் தூரத்தை எதிர்வரும் 2018 மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக இதுவரையில் 243 சிறு பாலங்கள், 4 பெரிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு ஏரி, குளங்களில் இருந்து மணல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கக் கோரி, பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது. மேலும் சமூக ஆர்வலர், சமூக அமைப்புகள் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப வேண்டுகோள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுவதில் பெரும் தடையாக இருக்கும் மண் எடுக்கும் பிரச்சனை தீர்ந்துவிட்டால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவில் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து.... சேக்கனா நிஜாம், மணிச்சுடர் சாகுல் ஹமீது 

நன்றி: அதிரை நியூஸ்