Hot Posts

6/recent/ticker-posts

மாண்வன் என்பதில்தான் எனக்கு பெருமை

‘பேராசிரியரின் மாணவன் என்பதில் தான் எனக்குப் பெருமை ’

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவர் நாவலர் ஏ.எம்.யூசுப் சாகிப் அவர்களின் மூத்த புதல்வர் வழக்கறிஞர் சையத் காஸிம் ரஸ்வி 28.07.2016ல் திருச்சியில் காலமான செய்தியை மறுநாள் மணிச்சுடர் நாளேட்டில் பிரசுரம் செய்தபோது சில தகவல்களை வெளியிட்டிருந்தேன்.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பி.எஸ்.ஸி. பயின்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞரான இவரின் வாதத் திறமையை நேரில் பார்த்து, நீதிபதி அப்துல் வஹாப் மூத்த வழக்கறிஞராக இருந்த போது இவரை ஜூனியராக அமர்த்தியதையும், தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய ‘மறுமலர்ச்சி’ வார ஏடு நாவலர் ஏ.எம்.யூசுப் சாஹிப் அவர்களை ஆசிரியராகவும், டார்பிடோ ஏ.கே.பாஷா அவர்களை பிரதம ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த போது பல்வேறு வழக்குகளை தொடர்ச்சியாக சந்திக்க வேண்டி வந்ததால் அவைகளை நடத்துவதற்காக வழக்கறிஞர் எஸ்.கே.ரஸ்வி திருச்சியில் வழக்கறிஞர் தொழில் செய்ய தொடங்கியதையும், அதில் குறிப்பிட்டிருந்தேன்.

அதில் நான் குறிப்பிட்டிருந்த முக்கிய பகுதி, “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், நாவலர் ஏ.எம்.யூசுப் சாகிப், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் தந்தை முத்துப்பேட்டை நெ.மு.முகைதீன் அப்துல் காதர் ஆகிய மூவரும் மிக நெருங்கிய சகாக்கள், மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர்கள்; அந்த தொடர்பின் காரணமாகவே நெ.மு.அப்துல் காதர் தனது ஒரே புதல்வியை நாவலர் ஏ.எம்.யூசுப் சாகிப் மகன் எஸ்.கே.ரஸ்விக்கு திருமணம் செய்து கொடுத்தார்” என்பதே.
இந்த செய்தியை படித்த பலரும் ஆச்சரியத்தோடு பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.
நெ.மு.அப்துல் காதர் அவர்களுக்கு 5 புதல்வர்கள், ஒரு புதல்வி. இந்த 6 பேரில் மூன்றாவதாகப் பிறந்தவர்தான் முன்னாள் எம்.பி. எம்.அப்துல் ரஹ்மான்.
1959 மே 28 அன்று பிறந்த எம்.அப்துல் ரஹ்மான் ஆரம்ப கல்வியை மட்டும் தனது சொந்த ஊரான முத்துப்பேட்டையில் பயின்றார். மார்க்க கல்வி மற்றும் அரபி மொழியை முதன்மையாக கொண்டு படித்து சமுதாயத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு அவரது தந்தை மயிலாடுதுறையை அடுத்துள்ள ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலை பள்ளியில் சேர்த்தார். அங்கு 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார். படிப்பில் கெட்டிக்காரராக இருந்த இவருக்கு பி.யூ.ஸியில் சேர திருச்சி செயின்ட் ஜோஸப், ஜமால் முகம்மது, சென்னை புதுக்கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளிலும் இடம் கிடைத்தது.
அன்றைய காலகட்டங்களில் மாணவர் களின் கனவுக் கல்லூரியாக இருந்த செயின்ட் ஜோஸப் கல்லூரியில் படிக்கப் போகிறோம் என்ற மகிழ்வில் சக தோழர்களிடம் சொல்லிவிட்டு பெட்டி படுக்கைகளுடன் திருச்சி வந்தவருக்கு அதிர்ச்சி.

ஆம்! அப்துல் ரஹ்மான் ஒப்படைக்கப் பட்டது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம். அவர் சேர்க்கப்பட்டது ஜமால் முஹம்மது கல்லூரியில். சுதந்திரமாக கல்லூரி வாழ்வை சராசரி இளமை கனவுகளோடு தொடங்கலாம் என்றால் கட்டுப்பாடுமிக்க பேராசியர் அவர்களிடம் தன்னை தன் தந்தை ஒப்படைத்துவிட்டாரே என கலங்கினார்.
1975 முதல் 78 வரை பி.யூ.ஸி., பி.ஏ. பொருளாதாரம், எம்.ஏ. பொருளாதாரம் என படித்தார். அவர் பி.யூ.ஸியில் சேர்ந்த போது தலைவர் பேராசிரியர் மிகுந்த கட்டுப் பாடுடன் நடத்திய ‘மாஸ்க் ஹாஸ்டல்’ என்ற பெயரிலான மிகச்சிறிய இடத்தில் தான் தங்கினார். நன்கு செலவழிக்கலாம் என்றால் தந்தையை விட கட்டுப்பாடான பேராசிரியரிடமல்லவா சிறைப்பட்டு விட்டோம் என நினைத்து அழுகை அழுகையாக வந்தது. ஆனால் தலைவர் பேராசிரியரிடம் பெற்ற பயிற்சியும் பக்குவமுமே எம்.அப்துல் ரஹ்மான் வாழ்வில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மெயின் ஹாஸ்டலில் அவர் தங்கி படித்துக் கொண்டிருந்த போதுதான் அக்கல்லூரியின் வெள்ளி விழா 1978ல் மூன்று நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அந்த கால கட்டத்தில் தான் இக்கல்லூரியில் குர்ஆன் மஜ்லிஸ் தொடங்கப்பட்டது. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைவராகவும்; எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இந்த குர்ஆன் மஜ்லிஸின் சார்பில் வெளிமாநிலங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டு தேசிய அளவிலான திருக்குர்ஆன் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. வெள்ளி விழா நிகழ்ச்சியின் முதல் நிகழ்வே இதுதான். பிரபல மார்க்கமாமேதைகள் நடுவர்களாக இருந்த இந்த போட்டியில் முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது.  அந்த காலத்தில் இது பெரிய தொகை. எல்லோரும் போற்றிப் புகழும் வகையில் குர்ஆன் மஜ்லிஸ் தலைவரும், பொதுச் செயலாளரும் இணைந்து இதனை சிறப்பாக நடத்தினர்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராக தலைவர் பேராசிரியர் அவர்கள் இருந்த 1978 காலகட்டத்தில், தங்களின் பிரத்தியேக கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசை எதிர்த்து மாநிலம் தழுவிய கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மண்டலத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களை ஒருங்கிணைத்து பெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதின் அவர்கள்தான். இதில் தலைவர் பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பேராசிரியர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, அப்போது கல்லூரி மாணவர்கள் பேரவையின் பொதுச் செயலாளராக இருந்த எம்.அப்துல் ரஹ்மான், திருச்சி மண்டலத்தின் அனைத்துக் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 15,000 மாணவர்களை திரட்டி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் உடன்பிறந்த தங்கை முத்து நாச்சியா திருமணம் 1976ல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது. முஸ்லிம் லீக் வரலாற்றில் இத்திருமணம் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

சிற்சில கருத்து வேறுபாடுகளால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து பிரிந்து 1969களில் தமிழ்நாடு முஸ்லிம் லீகை துவக்கி நடத்தி வந்த காலகட்டம் அது. நெ.மு.அப்துல் காதர் அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் லீகிலும், அவர் புதல்வர் எம்.அப்துல் ரஹ்மான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
இத்திருமணத்தில் பங்கேற்க இரு கட்சி களின் தலைவர்களான சிராஜூல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் ஸமத், சொல்லின் செல்வர் எம்.எம்.பீர்முகம்மது, வடகரை எம்.எம்.பக்கர், முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், நாவலர் ஏ.எம்.யூசுப் சாஹிப், சேலம் அப்துல் பாஸித், கீழக்கரை தை.அ.அப்துல் காதர், முழக்கம் கே.பி.ஷெய்குத் தம்பி, கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனார் மற்றும் நாகூர் ஹனீபா என பெரும் பட்டாளமே வந்திருந்தது.
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினார் எம்.அப்துல் ரஹ்மான். அன்று மாலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டத்தை இன்றைய திருவாரூர் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை அவர்களுடன் இணைந்து நடத்தி தாய்ச் சபை தலைவர்களை பேச வைத்தார். இக்கூட்டத்தின் நிறைவாக சிராஜூல் மில்லத் உரையாற்றினார்.

கூட்டம் முடிந்தபின் விருந்து, மாப்பிள்ளை
ஊர்வலம், நிக்காஹ் நடைபெற்றன. ‘‘இருமணங்கள் இணையும் இவ்விழாவில் சங்கமிக்கிறோம்; இரு கட்சிகளும் ஏன் இணையக் கூடாது?’’ என இங்கேதான் உரையாற்றியவர்களின் குரல் ஒலித்தது. இணைப்பிற்கான அடித்தளம் அமைந்தது.
அதன் பின்னர்தான் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கலைக்கப்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சங்கமமானது. இணைந்த பின் அதன் முதல் பொதுக்கூட்டத்தை விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு செய்தி என்ன தெரியுமா?
‘திருமணத்திற்கு இரு கட்சி தலைவர்களும் வந்த இடத்தில் எனக்கே தெரியாமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தை நடத்திவிட்டாயே என கூறி’ எம்.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் அவரது தந்தை நெ.மு.அப்துல் காதர் அவர்கள் மாதக்கணக்கில் பேசாமல் இருந்ததுதான். அப்துல் ரஹ்மானின் இயக்க உணர்வுகள் இரத்தத்தில் இரண்டறக் கலந்தவை.

முதுகலைப்படிப்பு முடிந்தபின் 1981ல் துபாய் சென்ற எம்.அப்துல் ரஹ்மான் பிரிட்டிஷ் கம்பெனியொன்றில் நிர்வாக மேலாளராக பணியில் சேர்ந்தார். 1984 முதல் 2009 வரை (வேலூரில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது வரை) துபாய் இஸ்லாமிய வங்கியில் துணைத்தலைவராக பணியாற்றினார். எங்கிருந்தாலும் இயக்கப்பணியாற்றுவதும் சமூக சேவை செய்வதும் அப்துல் ரஹ்மான் அவர்களின் கொள்கை. அதனால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அவர் பணி தொடர்ந்தது. தாயகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளுக்கு அவர் பங்களிப்பு மிகைத்தது.
ஆ.கா.அ.அப்துஸ்ஸமது அவர்கள் தலைமையிலான முஸ்லிம் லீக் (ச) என்றும் எம்.ஏ.அப்துல் லத்தீப் தலைமையிலான முஸ்லிம் லீக் (ல) என்று இரு பிரிவாக செயல்பட்ட நிலை மாறி ஒன்றிணைய மாட்டார்களா? என சமுதாயம் கேட்ட பிரார்த்தனை இறையருளால் நிறைவேறியது. 1993ல் ஒற்றுமை மாநாடு சென்னையில் நடைபெற்று அதில், இருதரப்பினருமே மனமகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். காலையில் தேனாம்பேட்டை காமராசர் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப்பின் ஊர்வலம் புறப்பட்டு சீரணி அரங்கை அடைந்து மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டுக்குப்பின், இரு தலைவர்களும் மனம் ஒன்றிணைந்து உளப்பூர்வமாக செயலாற்ற வேண்டும் என்பதற்காக சிராஜூல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத், ஷம்ஷீரே மில்லத் எம்.ஏ.லத்தீப் சாகிப், முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், வந்தவாசி கவிஞர் கே.ஏ.வஹாப் சாகிப் ஆகிய நால்வரையும் அமீரகம் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தினார் எம்.அப்துல் ரஹ்மான்.

அந்த நேரத்தில்தான் முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களைக் கொண்டு அமீரகத்தில் காயிதே மில்லத் பேரவை தொடங்கப்பட்டது. எம்.அப்துல் ரஹ்மான் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த கால காட்டத்தில்தான் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கலவரத்தை காரணம் காட்டி நிரபராதியான என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை வலைவிரித்திருந்தது. இது தலைவர்களின் அமீரக பயணத்திலும் எதிரொலித்தது.

பேராசியரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், நாவலர் குடும்பத்தை போலவே எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் குடும்பத்துடனும் மிக நெருங்கிய உறவு கொண்டவர். எம்.அப்துல் ரஹ்மான் தங்கை முத்து நாச்சியார் தலைவர் பேராசிரியரால் தூக்கி வளர்க்கப்பட்ட பிள்ளை; அதனால்தான் அவர் கணவர் எஸ்.கே.ரஸ்வி மரண செய்தி அறிந்ததும் துடித்தார், துவண்டார். இன்றும் அனுபொழுதும் அக்கரையுடன் முத்து நாச்சியார் பற்றி எம்.அப்துல் ரஹ்மானிடம் தலைவர் பேராசிரியர் விசாரிக்கிறார்.

இதுபற்றி எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் குறிப்பிடும் போது, ‘பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எனக்கு தலைவர் மட்டுமல்ல & தந்தைக்கு சமமான மரியாதைமிக்கவர் & நல்ல வழிகாட்டி.
இன்னமும் சொல்லப்போனால் எனக்குப் பெருமையே பேராசிரியரின் மாணவன் என்பதில்தான் என்கிறார்’ வழியும் கண்ணீரை துடைத்தப்படியே...
வரலாறு சொல்லிக்காட்டப்படுவதற்கல்ல & கற்றுக் கொள்வதற்கு.

எண்ணங்கள் தொடர்ந்து எழுத்துக்களாகும்...

- காயல் மஹபூப்