Hot Posts

6/recent/ticker-posts

கொரோனா குறித்த விழிப்புணர்வோடு இருங்க, பயத்தோடு வேண்டாம். ஆரோக்கியமா இருங்க. சத்தான உணவா சாப்பிடுங்க. * மனநல மருத்துவர் நவாஸ்கான்

கொரோனா இரண்டாவது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக செய்திகள் வருகிறது, எதிர்பாராத மரணங்கள், பொருளாதார இழப்புகள் இப்படி பல்வேறு இழப்புகள். ஒருபுறம் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க, மறுபுறம் அது குறித்த அச்சம் அதை விட வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. படித்தவர், படிக்காதவர் என பாகுபாடின்றி தினமும் இது குறித்து யாராவது பயத்தோடு கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். 

கொரோனா உடலளவில் தாக்கத்தை எந்தளவுக்கு ஏற்படுத்துகிறதோ அதை விட அதிக தாக்கம் மனதளவிலும் உண்டாக்குகிறது. நம் உடலில் நாம் காணும் நோய்கள் எல்லாவற்றுக்கும் (கொரோனா உட்பட) ஒருவகையில் அச்சம்தான் மூல காரணம் என்றால் நம்புவீர்களா..? நம்பத்தான் வேண்டும். மருத்துவரீதியாக பார்ப்போம்...

ஓர் இரவு வேளையில் நாம் காட்டின் வழியே செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். திடீரென்று ஒரு புலி எதிர்ப்படுகிறது உடனே நம் மனதிலே அச்ச உணர்வு தோன்றி, நம் உடலில் அட்ரினல் சுரப்பி அட்ரினலின் எனும் ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது. நம் தசைகள் எல்லாம் வலுப்பெறும் வகையில் ரத்த ஓட்டம் உடலெங்கும் பாயும். இதயம் வேகமாகத் துடிக்கும். 

மூளை நமக்கு உடனே கட்டளை பிறப்பிக்கும்... `சண்டையிடு அல்லது தப்பித்து ஓடிவிடு (fight or flight mode)' என்று. உடனே நாம் சுதாரித்துக்கொண்டு இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றில் நம்மை தற்காத்து கொள்வோம். இது இயற்கை நமக்கு உடலில் செய்திருக்கும் ஏற்பாடு.

ஆனால், இதே அச்ச உணர்வு தேவையின்றி எழுந்தாலும், கற்பனையாக வந்தாலும் கூட உடனே அட்ரினலின் சுரக்கும். அதன் தொடர்ச்சியாக நம் நோய் எதிர்ப்புத் திறன் (immune system) முழுமையாக முடக்கப்பட்டு விடும். சிந்திக்கும் திறன் குறைந்துபோகும். அந்த வேளையில் எந்த நோயும் நம்மை எளிதில் தாக்கும். ஒருவேளை நீங்கள் கொண்ட அச்சமே அந்த நோயைப் பற்றியதென்றால் சந்தேகமே வேண்டாம், அது நிச்சயம் நம்மை தாக்கும்.

கொரோனா வந்தாலே குலை நடுங்கி ஒடுங்க தேவையில்லை. தேவையற்ற பீதி பல நேரங்களில் நம்மை தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தேவையற்ற விபரீத முடிவுகளை எடுக்க வைக்கிறது. 

கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டாலே நிலைகுலைந்து போய் தற்கொலை பண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா என்றாலே மரணம் என்ற அளவில் தவறாக புரிந்து கொள்ளப்படுவதால் ஏற்படும் விபரித முடிவே இது.

கொரோனா தொடர்பான அச்சம் தரும் செய்திகளைப் பார்ப்பதைத் தவிருங்கள். கொரோனா மரணங்களைப் பார்க்கும்போது பயம் வந்துவிடும். பயம் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்,.

கொரோனா தொற்று கண்டவர்களில் 
85% பேருக்கு அறிகுறிகள் ஏதுமின்றி 
எப்போது வந்தது, எப்போது சென்றது என்பது கூட அறிய முடியாத அளவில் வந்து செல்கிறது. 

நம் உடல் இருக்கே... அதுமாதிரி சீரா சிறப்பா இயங்குற இயந்திரம் இதுவரைக்கும் உலகத்துல கண்டறியப்படவேயில்லை. நம்ம உடல் ஆச்சர்யத்தோட உச்சம். எதுவுமே நம் அனுமதியைக் கேட்டு செய்றதில்லை. இயல்பா இயங்குது. இப்படி அற்புதமாக நம்மை படைத்த இறைவன், அது சீர்கெட்டுப்போனா தன்னை தானே சரி செஞ்சுக்கிற திறனையும் நம் உடலுக்குக் கொடுத்திருக்கான். நாம அதை சரியா பராமரிக்கிறவரைக்கும் எந்தப் பிரச்னையும் வரவாய்ப்பில்லை.

உலகமே அடுத்து என்னன்னு விடை தெரியாம தவிச்சுக்கிட்டிருக்கிற நேரம் இது. எங்கிருந்தோ கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ், வந்து உலகத்தையே ஆட்டிப்படைச்சுக்கிட்டிருக்கு. தீர்வு என்னன்னு தெரியாம எதையாவது செஞ்சு தப்பிக்க முடியுமான்னு மனிதஇனம் தவிச்சுக்கிட்டிருக்கு.
சில வருஷத்துக்கு முன்னாடி, 'சில மாதங்கள் நீங்க வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியிருக்கும்'ன்னு சொன்னா நம்பியிருப்போமா... நடந்துச்சு... கொரோனா நம்மை வீட்டுக்குள்ள முடக்கிப்போட்டு வச்சிருந்துச்சு. பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு மனிதர்களைக்கூட முகம் பார்த்துப் பேச பயந்தோம். 

பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிற மனித இனம் இதுமாதிரி எத்தனை பேரிடர்களைக் கடந்து வந்திருக்கும். அம்மை, பிளேக்ன்னு கொத்துக் கொத்தா மனிதர்களைக் கொன்னு குவிச்ச எத்தனை நோய்களை நம் முன்னோர்கள் பாத்திருக்காங்க. இன்னைக்காவது, ஒரு வருஷத்திலயே தடுப்பூசியைக் கண்டுபிடிச்சு மக்கள் கையில தந்துட்டாங்க மருத்துவர்கள். அந்தக் காலத்துலயெல்லாம் எங்கேயிருந்துது தடுப்பூசி. பல வருஷங்கள் போராடி, நிறைய உயிர்களைப் பலிகொடுத்துத்தானே தடுப்பூசியை கண்டுபிடிச்சோம்.

மருத்துவத்துல நிறைய முன்னேறிட்டோம். ராத்திரி பகல் பார்க்காம மருத்துவர்களும், செவிலியர்களும் தூய்மைப்பணியாளர்களும் மருத்துவத்துறை ஊழியர்களும் நமக்காக போராடிக்கிட்டிருக்காங்க. கொரோனா மட்டுமில்லே... எய்ட்ஸ் மாதிரி கொடூர நோய்களுக்கும், வந்தா குணப்படுத்தவே முடியாதுன்னு நம்பின கேன்சருக்குக்கூட அதிநவீன சிகிச்சை கள் வந்திருச்சு, ஆதலால் முதலில் பயத்தை விட்டொழியுங்கள்.

கொரோனா சிகிச்சைக்காக தனிமை படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு முதலில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அவர்களின் பொழுதுபோக்கிற்காக மொபைல், புத்தகம், தொலைக்காட்சி வசதி செய்து தரலாம். அவரிடம் போனில்  பேசுங்கள் அவரை ஆசுவாசப்படுத்துங்கள். அவரை வெறுக்காதீர்கள் அவரை
அருவருக்கத்தக்க ஒன்றாக  பார்க்காதீர்கள். 

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் வார்த்தைகளினால் சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் அவர்களை மன உளைச்சல், வருத்தம், தற்கொலை முடிவு, எண்ணத்திலிருந்து மீட்க முடியும். 
நிச்சயம் உங்களின் அன்பால் அவர் கொரோனாவை வென்று வருவார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வோடு இருங்க, பயத்தோடு வேண்டாம். ஆரோக்கியமா இருங்க. சத்தான உணவா சாப்பிடுங்க.
எல்லாவற்றுக்கும் மேலாக 
*மனசை லேசா வச்சுக்கோங்க*

மனநல ஆலோசனைக்கு...
டாக்டர் எம் நவாஸ்கான் - M.Sc (Psy)., PGDGC., SLET., DFRT., MD(AM)., Ph.D
மனநல ஆலோசகர்
கடையநல்லூர்
8248964663