Hot Posts

6/recent/ticker-posts

நோன்பின் மான்பு. அ ஷேக் அப்துல்லா

★தூய்மையாகு நோன்பில்★
(முச்சீர் இரட்டை சமநிலை சிந்து)

நோன்பின் மாண்பதனை யறிந்தால் - இவர்
   நோகுஞ் செயல்களிலே போகார்
மேன்மை யதற்குள்தான் உண்டு - நாம்
   மீளும் இலகுவழிகள் கொண்டு!

மூன்று பத்துநாள்கள் நோற்று - தன்
   முத்து மின்னயிவர் பற்றின்
தோன்றும் பேரின்பம் அவருள் - அந்த
   தேர்வில் வென்றோரே தூயோர்!

ஊக்கந் தருகின்றான் வல்லோன் - தன்
   உயர்வு நிலைதனையே உனக்கு
நோக்கம் நோன்புகூலி யாக! - அந்த
   நுண்மை தெளிவதற்கே பேற்றாய்!

ஆட்டம் போடுகின்றார் எண்ணில் - இவர்
   அடைத்து கொள்கிறார்தன் வாசல்!
ஓட்டம் ஓடுவதில் நாட்டம் - பின்
   ஓடிப் பெறுகிறார்கை நட்டம்!

உண்ணா திருக்கயிவர் ஆசை - அதில்
   உண்ணா தவனுணர்த்தும் ஓசை
தன்னுள் கேட்பதுமோர் இன்பம் -  ஹூவில்
   தன்னை யறியத்தான் தூண்டும்!

மூழ்கி திளைத்துபெற ஏற்றம் - வள்ளல்
   முன்னர் பின்பத்தில் என்றார்
வாழும் வாழ்க்கையில்நாம் பெற்று - அந்த
   வழியில் பிறந்தபயன் அடைவோம்!

மறைந்த கருவூலம் என்றான் - அதனால்
   மனிதன் படைப்புபல விட்டான்
திறைக்குள் இருக்குமுத்தைக் காண - இவன்
   திறனைத் தூண்டிவிட்டான் நோன்பில்!

பிறைக்குள் மூழ்கிபோனான் இவனோ - என்று?
   பிறவி இரகசியம் காண்பான்!
மறையை நோக்கத்திற் கேற்ப - பேச
   மனிதன் துணையாகக் கொண்டான்!

காணும் இவனைத்தான் காட்டும் - மறை
   கருத்தில் தெளிவுகளின் பாதை
பேணும் மனத்துள்தான் பூக்கும் - இதைப்
   புரிய தூய்மையாகு நோன்பில்!
   
-ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.