பிளஸ் 2 தனித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 20ம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத பாடங்களில் மட்டும் மீண்டும் தேர்வு எழுத விரும்புவோர் 'ஹெச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பதினாறரை வயது நிரம்பியவர்கள் நேரடி தனித் தேர்வர்களாக எழுதலாம்.அவர்கள் 'ஹெச்பி' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். தொழில் கல்வி பாடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் மார்ச் 2011 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில், தொழில் கல்வி பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுத 2011ல் ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2012ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்படும். முதன் முதலாக பிளஸ் 2 தேர்வு எழுதும் 'ஹெச்பி' வகை நேரடி தனித்தேர்வர்கள் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடங்களுடன் 2005-2006ல் அறிமுகம் செய்யப்பட்ட பாடத்திட்டத்தின்படி 5 பாட தொகுப்புகளில் (பாடத்தொகுப்பு எண் 304, 305, 306, 307, 308) ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 20ம் தேதி வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அலுவலகம், இணை இயக்குநர் அலுவலகம் (புதுச்சேரி), அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கிறார்களோ அதே மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Social Plugin