வங்க கடலில் நிலை கொண்டிருந்த 'தானே' என்ற பெயர் கொண்ட தீவிர புயல், இன்று காலை 6.30-7.30 மணிக்கு புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்தது.
இது காலை 8.30 மணி அளவில் கடலூருக்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு தீவிர புயலாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடந்தபோது புதுச்சேரியில் 120 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூரில் 87 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது பதிவாகி உள்ளது. இது 135 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு இருந்தது.
கடலூர் அருகே கரை கடந்த புயல் 11.30 மணி அளவில் கள்ளக்குறிச்சிக்கும், பகல் 2 மணி அளவில் சேலத்துக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி செல்ல வாய்ப்பு உள்ளது.
இதுமேலும் வலு இழந்து நாளை காலை காற்றழுத்த பகுதியாக மாறி மேற்கு நோக்கி சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். வடமாவட்டங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்யும்.
வடமாவட்டங்களில் கடலோர பகுதிகளிலும், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும். தரைக்காற்று வேகமாக வீசும்.
புயல் மேற்கு நோக்கி நகரும்போது வீசும் பலத்த காற்றால் கூரை வீடுகள் சேதமடையும். மின்கம்பங்கள், தொலைத் தொடர்பு இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கல்பாக்கம், கேளம்பாக்கம்-10 செ.மீ., கடலூர், மதுராந்தகம், உத்திரமேரூர்-9 செ.மீ.
செங்கல்பட்டு, மகாபலிபுரம்-8 செ.மீ., சென்னை விமான நிலையம், திருவள்ளூர், சிதம்பரம்-7 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டி.ஜி.பி. அலுவலகம், நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம், வானூர், சீர்காழி ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Social Plugin