Hot Posts

6/recent/ticker-posts

முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழக எம்பிக்கள் 39 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் : விஜயகாந்த் ஆவேசம்


 முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால் தமிழக எம்.பி.க்கள் 39 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து தேனியில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கினால் அணை உடைந்து விடும் என்று பயம் காட்டுகிறார்கள். மக்கள் பலியாவார்கள் என்றெல்லாம் பீதி கிளப்புகின்றனர். நமக்கு மட்டும் மக்கள் மீது அக்கறை இல்லையா?

முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும் அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது. அந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் இடுக்கி அணைக்குதான் வந்து சேரும். முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும் அதன் முழு கொள்ளளவே 10 டிஎம்சிதான். இடுக்கியில் 70 டிஎம்சி வரை தண்ணீரை தேக்க முடியும். அப்படியிருக்க, அணை உடையும் என்று ஏன் பீதியை கிளப்புகிறார்களோ தெரியவில்லை. கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணியே, அணை பலமாகத்தான் இருக்கிறது என்று கூறிவிட்டார். வந்தாரை வாழ வைப்பது தமிழகம். முதலில் கேரளாவில் தமிழர்களை தாக்கினார்கள். அப்போது நாம் பொறுமையாக இருந்தோம். இதையடுத்து சபரிமலைக்கு சென்றவர்களை தாக்கினார்கள். அப்போதும் பொறுமை காத்தோம். தொடர்ந்து தாக்குதல் அதிகரிக்கவே தமிழர்கள் திருப்பியடிக்க ஆரம்பித்து விட்டனர். கேரள எல்லைப் பகுதியில் 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர். தமிழக போலீசார் தப்புத் தப்பாக முடிவெடுக்கின்றனர். போராட்டத்துக்கு அனுமதி அளித்துவிட்டு அங்கே போகாதே, இங்கே போகாதே என்று சொன்னால் எப்படி? அதற்கு அனுமதியே கொடுத்திருக்க கூடாது. தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் போலீசார், அவர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது. கேரள எல்லைக்கு போகிறவர்களை ஏன் தடுக்கிறீர்கள்? அவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்? மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.