முல்லை பெரியாறு அணை விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. கேரளாவில் வசித்து வந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக வரும் சம்பவம் தொடர்கிறது.
தமிழகம், கேரள மாநிலங்களிடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்பட்டதால் எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்களும் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து கேரளாவுக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 10 நாட்களாக தமிழக, கேரள எல்லை பகுதியை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து செல்வதும், அவர்களை போலீசார் விரட்டியடிப்பதும் தொடர்ந்து வருகிறது. குமுளி, கம்பம் வழியாக கேரளாவுக்கு போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த வாரம் வைகோ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கடந்த 12-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேனியில் நேற்று மனித சங்கிலி நடத்தப்பட்டது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களின் உடைமைகளும் சேதப்படுத்தப்படுகின்றன. திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், ஏலக்காய் தோட்டம் அடித்து நொறுக்கப்பட்டன. உயிருக்கு பயந்து கடந்த இரு நாட்களாக கேரளாவில் வசிக்கும் தமிழக தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தமிழக பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். சிலருக்கு தேனி மாவட்டத்தில் உறவினர்கள் இருப்பதால் அங்கு தங்கியுள்ளனர். பலர் எங்கே செல்வது என்று தெரியாமல் மனைவி, குழந்தைகளுடன் அகதிகளாக நிற்கின்றனர்.
கேரளாவில் ஆட்டுவாறை, மணத்தோடு, தலையங்கம், பாறைத்தோடு, நெடுங்கண்டம், கேரியாறு, உடும்பன்சோலை போன்ற பகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். குறைவாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் குறி வைத்து தாக்கப்படுகின்றன. கையில் ஆயுதங்களுடன் வரும் கேரள மாநிலத்தவர்கள், தமிழர்களின் வீட்டு கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்குகின்றனர். பெண்களை ஆபாசமாக பேசுகின்றனர். இப்பகுதிகளில் இருந்து தமிழக எல்லைக்கு 7 கி.மீ. தூரம் ஒற்றையடி மலைப்பாதையில் வர வேண்டும். சாக்கலூத்து மெட்டு, குதிரைப்பாஞ்சான் மெட்டு, சதுரங்கப்பாறை போன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளை கடக்க வேண்டும். இதன் வழியாக கடந்த இரு தினங்களில் மட்டும் 5 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் தப்பி வந்துள்ளனர். 10 குடும்பங்களை சேர்ந்த 40-க்கும் அதிகமானோர் இன்று அதிகாலை தேவாரம் வந்து சேர்ந்தனர். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை உறவினர்களிடம் சொல்லி கண்ணீர் விட்டனர். இதனால், கேரளாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களின் நிலையை அறிய முடியாமல் தேனி மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர்.
தமிழக போலீசார் டிஐஜி சஞ்சய் மாத்தூர் தலைமையில் தேவாரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் தப்பி வரும் தகவல் அறிந்தால் உடனடியாக வாகனங்களில் சென்று அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர். தப்பி வரும் தமிழர்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சந்திக்க கூடாது என்பதற்காக அவர்களை உடனடியாக வாகனங்களில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்து செல்கின்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Social Plugin