Hot Posts

6/recent/ticker-posts

இரத்ததானத்தில் முதலிடம் பெற்று விருதுகளை குவித்து வருகிறது டி.என்.டி.ஜே.!!



 ஏகத்துவப் பிரச்சாரப் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பணியிலும் குறிப்பாக இரத்த தானத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களும் போட்டி போட்டுக் கொண்டு இரத்ததான முகாம்களை நடத்துவதைக் கண்டு அனைத்துத் தரப்பு மக்களும் வியப்பில் இருக்கின்றார்கள்.

இஸ்லாமியர்கள் என்றால் இரத்தத்தை ஓட்டக்கூடியவர்கள் என்ற நிலையை அடியோடு மாற்றி இரத்தத்தை கொடையாக வழங்குவதில் இஸ்லாமியர்கள்தான் முன்னிலையில் உள்ளார்கள் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து உள்ளது என்றால் அது மிகையாகாது.

நாள்தோறும் முகாம்கள், வாரந்தோறும் முகாம்களை நடத்துவதோடு மட்டுமின்றி இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்தச் சேவையை நோக்கி அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை போன்ற மாநகரங்கள் முதல் சிறிய குக்கிராமங்கள் வரை எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்பட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஏற்பாடு செய்து தருகின்றார்கள்.

இப்போதெல்லாம் அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும், எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்பட்டாலும் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை அணுகும்படி மக்களை அறிவுறுத்துவதைக் காணமுடிகின்றது.
அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு இந்த உயிர் காக்கும் மனித நேயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் டி.என்.டி.ஜேவினர். அல்ஹம்துலில்லாஹ்.!

தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் நிறுவனங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அரசு பொது மருத்துவமனையும் இணைந்து ஊக்குவிப்புப் பாராட்டு விருதுகளை வழங்கி வருகின்றார்கள்.
இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 7 வருடங்களாக இந்தத் தன்னார்வ இரத்த தானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னிலை வகித்து வருகின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இந்த வருடமும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் இரத்த தான தன்னார்வ சேவையைப் பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 29/11/2011 அன்று சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 6 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சகோ.விஜயன் துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு சென்ன மாநகர மேயர் சைதை துரைசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வழக்கம் போலவே இந்த வருடமும் தன்னார்வ இரத்த தானச் சேவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தைப் பிடித்தது. அல்ஹம்துலில்லாஹ்.

உயிர்காக்கும் சமூகப் பணியில் அதிக அதிகமாகத் தங்களின் பங்களிப்பைத் தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களுமே இந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

இரத்த தான முகாம்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தின் சேவையைப் பாராட்டி ஒரு பதக்கமும், கேடயமும் வழங்கப்பட்டன.

இதை டி.என்.டி.ஜேவின் மாநிலச் செயலாளர்கள் அப்துல் ஜப்பார் மற்றும் எழும்பூர் சாதிக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அத்தோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில, மாவட்ட மற்றும் கிளைகளின் சேவைகளைப் பாராட்டி சென்னை கோஷா மருத்துவமனை 4 பதக்கங்களையும், குழந்தைகள் நல மருத்துவமனை 2 பதக்கங்களையும் , சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை 4 பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தன.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை, வடசென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பதக்கம் வீதம் மொத்தம் 3 பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதைப்போல சென்னை அரசு மருத்துவமனை வழங்கிய பதக்கங்களில் 60 பதக்கங்கள் டி.என்.டி.ஜேவின் கிளைகளுக்குக் கிடைத்தன. இதன்மூலம் மீண்டும் தன்னார்வ இரத்த தானத்தில் முதலிடத்தைப் பிடித்து விட்டது டி.என்.டி.ஜே. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
சென்னை மட்டுமின்றி தமிழகத் தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் தன்னார்வ இரத்த தானத்தில் மருத்துவமனைகள் தரும் விருதுகளைக் குவித்து வரும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழகம் மட்டுமின்றி நம் கொள்கைச் சகோதரர்கள் குழுமி இருக்கும் வளைகுடா நாடுகளிலும் கூட இந்த ஜமாஅத்தின் கொள்கைச் சொந்தங்கள் தன்னார்வ இரத்த தான முகாம்களை நடத்தி, அதனால் அந்த நாட்டு அரசிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தம் கொடுப்பதே ஹராம் என தவறான பிரச்சாரம் செய்து வந்த அசத்தியவாதிகள் கூட தங்களுக்கோ, தங்களின் உறவினர்களுக்கோ அவசரமாக இரத்தம் தேவைப்பட்டால் அவர்களும் உடனடியாக டி.என்.டி.ஜே சகோதரர்களை நாடும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த ஜமாஅத்தின் மார்க்கப் பணிகளோடு சமுதாயப் பணிகளும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர்.நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர் ஆன் 3:114)