Hot Posts

6/recent/ticker-posts

ஆசிரியர் தகுதி தேர்வு மொழி பாடத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அரசு முடிவு..



 ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில் தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்கள் சமூக அறிவியல் எழுத வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்தந்த பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக அரசு பிறப்பித்து வரும் உத்தரவுகளால் பட்டதாரிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எழுத்து தேர்வு உண்டா, இல்லையா என்பது முதல் குழப்பம். டிஇடி தேர்வா அல்லது டிஆர்பி தேர்வா, இரண்டு தேர்வு எழுதிய பிறகும் சான்று சரிபார்ப்பு உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களில் இடைநிலை, பட்டதாரிகள் உள்ளனர். எந்த தேர்வை நடத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இதுவரை உத்தரவு வரவில்லை. எந்த தேர்வு முதலில் நடக்கும் என்பதும் தெளிவாகவில்லை. இந்நிலையில், தலைமை செயலகத்தில் இதுதொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 
அந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சில முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கடைபிடிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தகுதி தேர்வு குறித்து என்சிடிஇ தெரிவித்துள்ள அம்சங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். 

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் கணக்கு, அறிவியல் அல்லது சமூக கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ் 60 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்க வேண்டும் என்று இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் இருந்தே 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்க உள்ளனர். தகுதித் தேர்வு குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டு மே மாதம் தேர்வு நடத்தலாம் என்றும் உத்தேசித்துள்ளனர். ஆனால் குறைந்த கால அவகாசத்தில் தகுதித் தேர்வை நடத்த முடியாது என்ற ஒரு கருத்தும் உள்ளது. அதனால், நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்து தேர்வை இந்த ஆண்டு நடத்தவும் முடிவு செய்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள தேர்வுக்கான வினாத்தாளில் 50 சதவீதம் கடினமான கேள்விகளை கேட்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவர். இதற்கிடையே, கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளில் விடுபட்டவர்கள் 518 பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான கடந்த ஆண்டு ஏற்பட்ட காலி இடங்களில் 1260 பேரும் தற்போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.