Hot Posts

6/recent/ticker-posts

வனப்பகுதியில் மரங்களை வெட்ட முயற்சி ? பெரியாறில் புதிய அணை கட்டும் பணி துவக்கம்..



 முல்லை பெரியாறு அணை பிரச்னையால் தமிழகம்  கேரளா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதிய அணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கி உள்ளது. இதற்காக வனப்பகுதிகளில் மரங்களை வெட்டி அகற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேரளாவை விட்டு வெளியேறுவதை தடுக்க கேரள போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளதால் அணை பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கேரளாவில் முல்லை பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்டுவதில் கேரள அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது.கேரள மக்களை காப்பாற்ற புதிய அணை கட்டுவதை தவிர வேறு வழியில்லைஎன்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தொடர்ந்து கூறி வருகிறார். இது புதிய அணைக்கான பணியை துவங்க தயாராகி வருவதையே காட்டுவதாக போராட்டக்காரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

கேரளாவில் உள்ள தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டதால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனால் கேரள அரசை கண்டித்து தமிழகத்திலும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மலையாளிகள் நடத்தி வரும் கடைகள் மீது ஆங்காங்கு தாக்குதல் நடந்து வருகிறது. பதற்றம் நீடிக்கும் நிலையில், புதிய அணை கட்ட தேர்வு செய்துள்ள வனப்பகுதியில் கேரள அரசு மரங்களை வெட்டி வருவதாக தகவல் பரவியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதியின்றி மரங்களை வெட்ட முயற்சிப்பது பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தமிழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,  நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு, அணையின் பலம் பற்றி ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகிறது. எனவே, மத்திய அரசின் அனுமதியின்றி அணை கட்டும் பணிகளை கேரள அரசு துவங்க முடியாது. மரங்களை வெட்டுவதாக அங்கிருந்து தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனாலும் தமிழக அதிகாரிகள் அணை பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.
இதற்கிடையில், சபரிமலை சென்று விட்டு வந்த தேனியை சேர்ந்த பக்தர்கள் செங்கோட்டை அருகே புனலூரில் தாக்கப்பட்டதாலும், தேனியில் நேற்று கேரள அரசை கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் எனும் வாலிபர் தீக்குளித்ததாலும் பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இன்றும் சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. 16வது நாளாக இன்றும் கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான போலீசார் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சாலை தாலுகாவுக்கு உட்பட்ட மாட்டுத்தாவளம் எனும் இடத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த சேக்முகமது என்பவருக்கு சொந்தமான ஏலத்தோட்டம் உள்ளது. இங்கு நேற்று புகுந்த மர்ம கும்பல் தொழிலாளர் குடியிருப்புகளை சேதப்படுத்தியது. அங்கிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தனர். இதுகுறித்து சாந்தம்பாறை போலீசாருக்கு தமிழ் மக்கள் தகவல் தெரிவித்தனர். கேரளாவில் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து தகவல் சொல்வதை தடுக்க கேரள போலீசார் மும்முரமாக உள்ளனர். அவர்களை தடுத்து மீண்டும் கேரள பகுதிக்கே திருப்பி அனுப்புகின்றனர். இதன் அடுத்தகட்டமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிறுதோணி, உடுப்பன்சோலை, நெடுங்கண்டம், சப்பாத்து உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கேரள போலீசார் தினமும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். தமிழகத்துக்கு வர அனுமதிக்காததால் நேற்றும், இன்றும் ஒருவர் கூட கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரவில்லை.