Hot Posts

6/recent/ticker-posts

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்:10 தடவை குலுங்கியது நியூசிலாந்து..



இந்தோனேசியாவில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் நியூசிலாந்திலும் 10 தடவை பூமி குலுங்கியது. நியூசிலாந்தின் 2-வது பெரிய நகரமான கிறிஸ்ட் சர்ச் நகரில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது.
 
கடந்த மாதம் (டிசம்பர்) 23-ந்தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து புத்தாண்டு தின கொண்டாட்டம் தொடங்கிய டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. அதை தொடர்ந்து கிறிஸ்ட் சர்ச் நகரில் 10 தடவை நில அதிர்வு உணரப்பட்டது. எனவே அச்சமடைந்த மக்கள் இரவு முழுவதும் தங்களின் தூக்கத்தை தொலைத்து விட்டு கண் விழித்து இருந்தனர்.
 
இந்த நில நடுக்கங்கள் 5.5 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. ஆனால் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.   அதன் தொடர்ச்சியாக இன்று இந்தோனேசியாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. வடக்கு பகுதியில் சுமத்ரா தீவில் உள்ள பாண்டா ஏக் மாகாணத்தில் அதிகாலை 2.09 மணிக்கு உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். விடிய விடிய ரோடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர்.
 
இங்கு 5.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதே பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு கடும் பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான வர்கள் உயிரிழந்தனர்.  
 
இந்தோனேசியாவும், நியூசிலாந்தும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்பம் மற்றும் எரிமலை வெடிக்கும் நெருப்பு வளையத்தில் உள்ளன. எனவே இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.