ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாததால், 20 ஆயிரத்துக்கு குழந்தை விற்க முயன்ற தாய் உட்பட 3 பெண்களை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பூங்கா நகர் பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, மீண்டும் செல்வி கர்ப்பமானார்.
இந்நிலையில், செல்வி குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டார். அதே பகுதியில் பூ விற்கும் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த சரளாவிடம் (40), “ரொம்ப கஷ்டமாக உள்ளது. குழந்தைகளுக்கு ஒருவேளைக்கு சாப்பாடு கொடுக்க கூட முடியவில்லை. அதனால், பிறக்கும் குழந்தையை விற்று பணம் வாங்கி தா’’ என்று கேட்டிருக்கிறார். உடனே சரளாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனையில் செல்விக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி சரளாவிடம் செல்வி கூறினார். உடனே சரளா ரூ.20 ஆயிரத்துக்கு விற்று தருவதாக தெரிவித்தார். அதன்படி, நேற்று மாலை செல்வி பிறந்து 3 நாட்களான பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு, தனது 5 வயது மகனை அழைத்துக் கொண்டு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா அருகில் சென்றார். அப்போது சரளா, சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகரைச் சேர்ந்த புரோக்கர் அமலா (34) என்பவரை அழைத்து வந்தார்.
அங்கு வைத்து ரூ.20 ஆயிரத்தை செல்வியிடம் அமலா கொடுக்கவும், குழந்தையை கொடுத்தார். அப்போது குழந்தை அழுதது. இதைக் கண்ட செல்வியின் 5 வயது மகன், ‘‘அய்யோ பாப்பா.. பாப்பா.. எங்கே கொண்டு போகிறீர்கள்?’’ என்று கதறி அழுதான். அதை பொருட்படுத்தாமல் குழந்தையை அமலா தூக்கிக் கொண்டு சென்றார். ஆனால், செல்வியின் மகன் பின்னால் ஓடிச்சென்று, அமலாவின் காலை பிடித்துக் கொண்டு விடவில்லை.
இதைக் கண்டு ரோட்டில் சென்றவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அமலா, சரளா, செல்வி ஆகியோரை சிறை பிடித்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பெண் குழந்தையை மீட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ரூ.20 ஆயிரத்துக்கு குழந்தை விற்க முயன்றது தெரிந்தது. இதுதொடர்பாக, 3 பெண் களையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
Social Plugin