Hot Posts

6/recent/ticker-posts

தும்மல் வந்தால் நிறுத்தாதீர்கள்!!



"அச், ஹச், ஹச்சு, ஹச்சூ, அட்சூ, அச்சூ இவையெல்லாம் என்ன வார்த்தை, என்ன பாஷை என்று புரிகிறதா? நாம் தும்மும்போது, தும்மலோடு சேர்ந்து வரும் சத்தங்கள் தான் இவைகளெல்லாம்! நல்ல காரியம் ஒன்றை நாலு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த இடத்தில் தும்மல் வந்து விட்டால், அதை நல்ல சகுனமாக எடுத்துக் கொண்டு, சந்தோஷப்படுபவர்களும் உண்டு.
 
கெட்ட சகுனமாக எடுத்துக் கொண்டு, கஷ்டப்படுபவர்களும் உண்டு. தும்மல்- பாதி தன்னிச்சையான ஒரு செயல். மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும், நுரையீரலில் உள்ள காற்று, மிக வேகமாக வெளியேறுவது தான் தும்மல். மூக்கின் உள்பகுதியில், ஏதோ ஒரு பொருளால் ஏற்படுத்தப்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு தான், தும்மல் வருவதற்குக் காரணம்.
 
அதிக வெளிச்சமான விளக்கைப் பார்த்தால் தும்மல் ஏற்படும். வயிறு நிறைய சாப்பிட்டாலும் தும்மல் ஏற்படும். வைரஸ் கிருமி பாதிப்பினாலும் தும்மல் ஏற்படும். கண் ஆபரேஷனுக்காக, கண்ணில் போடப்படும் ஊசியினால் தும்மல் ஏற்படுவதுண்டு. கண் இமையிலுள்ள முடியைப் பிடுங்குவதனாலும் முடியை இழுப்பதனாலும் தும்மல் ஏற்படும்.
 
காற்றில் கலந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத, வேண்டாத பொருட்களின் தூசிகள், துகள்கள், நுரையீரலுக்குள் நுழைந்து விடக்கூடாதே என்பதற்காக, இயற்கையாக உடல் ஏற்படுத்தும் பாதுகாப்பு வேலை தான் தும்மல். காற்றில் அதிக அளவில் கலந்துள்ள புகை, தூசி, குப்பை ஆகியவைகளும் தும்மல் உண்டாக காரணங்களாகும்.
 
ஆங்கிலம் பேசும் நாடுகளில், ஒருவர் தும்மல் போட்டால், எதிரில் இருப்பவர் `காட் பிளஸ் யூ' என்று சொல்வார். சீனாவில் ஒருவர் தும்மல் போட்டால், எதிரிலிருப்பவர் `யிபாய்சூயி' என்று சொல்வாராம். இதற்கு `நூறாண்டு காலம் வாழ்க' என்று அர்த்தம். கிரேக்க காலத்தில், தும்முவது என்பது ``இறைவனிடமிருந்து வரும் நல்ல செய்தி, நல்ல சகுனம்' என்று ஒரு கருத்து இருந்தது.
 
கிழக்கு ஆசியாவில் சில பகுதிகள், சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள கலாசார பழக்கவழக்கங்களின்படி, எந்த ஒரு நோயும் இல்லாத ஒருவருக்கு தும்மல் வந்தால், அவரை யாரோ நினைக்கிறார்கள் என்று அர்த்தமாம். போலந்து நாட்டில் தும்மினால், மாமியார் தனது மருமகனை திட்டுகிறார் என்று அர்த்தமாம்.
 
கின்னஸ் புத்தக ரிக்கார்டுக்காக, ஒருவர் 977 நாட்களில், சுமார் பத்து லட்சம் தடவைக்கு மேல் தும்மினார் என்று ஒரு பதிவு இருக்கிறது. காற்றின் மூலமாக, மூக்குக்கு உள்ளே, தேவையில்லாத வேண்டாத பொருட்கள், ஏதாவது மூக்கின் உள்ளே நுழைந்தவுடன் மூக்குக்கு உள்ளே உள்ள மெல்லிய சவ்வு `ஹிஸ்டமின்' என்கிற பொருளை வெளியிடச் செய்கிறது.
 
இந்த ஹிஸ்டமின் பொருள், மூக்கிலிருந்து நரம்பு செல்களைத் தூண்டி விடுகிறது. இந்த நரம்பு மூலமாக, மூளைக்கு செய்தி போய், தொண்டையிலுள்ள உணவுக்குழாயிலும், காற்றுக் குழாயிலும் உள்ள தசைகளை இயக்கி, மூக்குப் பாகத்திலும், வாய்ப்பாகத்திலும் உள்ள துவாரத்தைப் பெரிதாக்கி, நுரையீரலில் இருந்து மிகமிக வேகமாக, காற்றை வெளியே தள்ளுகிறது.
 
இந்த காற்றோடு, உடலின் உள்ளே நோய்க்கிருமிகள் இருந்தால் அவைகளும் சேர்ந்து வெளியே வருகிறது. ஒருவர் தும்மும்போது, சுமார் நாற்பதாயிரம் சின்னச்சின்ன நீர்த்திவலைகள், அதாவது கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய நீர்த்துளிகள், மூக்கு வழியாக வெளியே வந்து சிதறுகிறது. யானை துதிக்கையில் நீரை இழுத்து `ஸ்பிரே' பண்ணுமே, அதுபோலத்தான் நாம் தும்மும் போது ஏற்படுகிறதாம்.
 
நோயுள்ளவர்கள் தும்மினால், இந்த நீர்த்துளிகளோடு, நோய்க்கிருமிகளும் சேர்ந்து வெளியே வந்து விடும். தும்மும்போது, நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்று, சுமார் 100 மைல் வேகத்தில் வருகிறது. இந்த வேகம் இருக்கிறதே, மிகச் சாதாரணமான வேகம் இல்லை. மணிக்கு 100 மைல் வேகம், அதாவது புயல் காற்றின் வேகம்.
 
அதனால் தான், தும்மும்போது, இடையில் நிறுத்த முயற்சிக்கவோ, அல்லது நிறுத்தவோ கூடாது. அதே மாதிரி தும்மும்போது மூக்கை மூடுவதையோ, வாயை மூடுவதையோ செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், அது மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில், மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணும். தும்மல் வரும் வேகத்தில், துண்டை வைத்தோ, கையை வைத்தோ, உடலைக் கட்டுப்படுத்தியோ, தும்மலை தடுத்து நிறுத்த முயற்சி செய்தால், காது செவிடாகி விட வாய்ப்புண்டு.
 
அதே மாதிரி தலையிலுள்ள ரத்தக்குழாய்களை கூட பாதிப்படையச் செய்ய வாய்ப்புண்டு. அந்த அளவிற்கு தும்மலின் வேகம் இருக்கும். எனவே நீங்கள் தும்மினாலும் சரி, மற்றவர்கள் தும்மினாலும் சரி, தயவு செய்து நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். தூங்கும் போது தும்மல் வராது. அதாவது நல்ல தூக்கத்தில் தும்மல் வராது. அரைகுறை தூக்கமாக இருந்தால், மூக்கில் போகும் நெடி, தும்மலை உண்டு பண்ணும்.
 
அதே மாதிரி கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டும் தும்ம முடியாது. கண் இமையில் ஆரம்பித்து, முகம், தொண்டை, மார்பு, வயிறு ஆகியவற்றிலுள்ள சில குறிப்பிட்ட தசைகள் தும்மும் போது சுருங்கி விரிகின்றன. அடிக்கடி தும்மல் வருவதற்கு, `அலர்ஜியும்' ஒரு மிக முக்கிய காரணமாகும்.
 
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் முடி, படுக்கை விரிப்பு, தலையணை, செடி கொடிகளின் துகள்கள், நெற்பயிரின் துகள்கள், குளிர்ந்த காற்று, ஏசி காற்று, இவைகளினால் `அலர்ஜி' ஏற்பட்டு, அதனாலும் தும்மல் ஏற்பட வாய்ப்புண்டு. பருவமாற்றம், சீதோஷ்ண மாற்றம் முதலியவைகளும் தும்மலை உண்டாக்கும்.
 
அலர்ஜியினால் ஏற்படும் தும்மலில், மூக்கு வீங்கிப் போய், மூக்கு சிவந்து, எரிச்சலாகி, மூக்கில் நீர் வடிய ஆரம்பித்து, அதற்குப்பிறகு தும்மல் வர ஆரம்பித்து விடும். தும்மல் சிலபேருக்கு ஒன்று, இரண்டோடு வந்து நின்று விடும். சிலபேருக்கு பத்து, இருபது என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து தும்மிவிட்டு, அதற்குப் பிறகு கிடைக்கிற திருப்தி இருக்கிறதே, அது மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.
 
என்றாலும், அதிகமாக தும்முகிறவர்கள், தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்ய வேண்டும் நண்பரொருவர் தினமும் தொடர்ந்து தும்மிக் கொண்டே இருப்பார். ``யாரோ உங்களை அடிக்கடி நினைக்கிறார்கள்'' என்று நான் சொன்னால், அதற்கு அவர், ``என்னை யார் அடிக்கடி நினைக்கப்போறது? கடன்காரன் தான் தொடர்ந்து நினைச்சுட்டு இருக்கான்''' என்பார் கிண்டலாக. மொத்த ஜனத்தொகையில் சுமார் 18 லிருந்து 35 சதவீதம் பேருக்கு, தும்மலால் பாதிப்பு ஏற்படுவதுண்டு.