சீனாவில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை காப்பாற்ற காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் இந்திய தூதரக அதிகாரி. அவர் போராட்டத்தைப் பார்த்து மிரண்டு போன சீன அதிகாரிகள் இந்தியர்களை விடுவித்துள்ளனர். இதெல்லாம் இந்தியர்களுக்கு புதிது. இப்படியெல்லாம் எந்த அதிகாரியும் மெனக்கெடுவது இல்லை. மீட்டு கொண்டு வெளியே வந்தபோது சீன வியாபாரிகள் தாக்கியதால் அனைவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இவு என்ற பகுதியில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகின்றனர். பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் மும்பையைச் சேர்ந்த தீபக், அகர்வால் என்ற இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர். அந்த நிறுவனம் மோசடி செய்துவிட்டு ஓடிவிட்டது. தீபக்கையும், அகர்வாலையும் சீன வியாபாரிகள் சட்ட விரோதமாக பிடித்து வைத்துக் கொண்டனர். 15 நாட்கள் வரை பல கொடுமைகளை செய்துள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே இந்திய அதிகாரி பாலச்சந்திரன் இவு கோர்ட்டுக்கு சென்றார். அங்கு போலீஸ் அதிகாரிகளிடம் பேசி இந்தியர்களை மீட்க வாதாடினார்.
பலன் இல்லாததால் காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இந்த போராட்டத்தைக் கண்டு பயந்த அதிகாரிகள் வாலிபர்களை அவரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட வாலிபர்களை அழைத்து வந்தபோது அங்கிருந்த வியாபாரிகள் மூவரையும் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் தொழிலாளர்களின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்.
ஆரம்பத்தில் தாக்குதலே நடைபெறவில்லை என மறுத்த சீனா, அதன்பின்னர் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பொதுவாக வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை காப்பாற்ற மற்ற நாட்டு தூதரகங்களைப் போல் இந்திய தூதரகங்கள் முனைப்பு காட்டுவது இல்லை என்ற புகார் பரவலாக இருக்கிறது. புகாரை வாங்குவதற்கும், நடவடிக்கை எடுப்பதிலும் மெத்தனமாக செயல்படுவது இந்திய அதிகாரிகளின் வழக்கம். அதற்குள் பிரச்னை எல்லை மீறி விடும். ஆனால் பாலச்சந்திரன் தனது உயிரை பணயம் வைத்து இந்தியர்களை மீட்டிருக்கிறார்.
இதுபோன்று வெளி நாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் அதிகாரிகள் இருந்தால், துடிப்புடன் செயல்பட்டால் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கும்.
Social Plugin