சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அருகில் இருக்கும் பள்ளி நேற்று விடுமுறை என்பதால் மாணவ மாணவிகள் தப்பித்தனர். சென்னை அடையாறு காந்திநகர் 4வது பிரதான இணைப்பு சாலை பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் உள்ளது.
இங்கிருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ராட்சத குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீரேற்று நிலையத்தின் சுவருக்கும், முத்தையா ராணி மேல்நிலை பள்ளி சுற்றுச்சுவருக்கும் இடையே 2 அடி அகலப் பாதை உள்ளது. இந்த பாதையை மல்லிகைப்பூ நகர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீரேற்று நிலையத்துக்குள் கழிவுநீர் தேங்கி சுற்று சுவர் இடிந்து விழுந்தது. அவ்வழியாக சென்ற மல்லிகைப்பூ நகரை 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், மல்லிகைப்பூ நகரில் 600க்கும் அதிகமான வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
கழிவுநீரேற்று நிலைய சுற்றுச்சுவர் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. எல்லா அரசு கட்டிடங்களைப் போலவே இதுவும் பழுதடைந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீரேற்று நிலையத்துக்குள் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தேங்கியது. இதனால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலரும் இந்த பாதையைதான் பயன்படுத்துகின்றனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அந்தப்பக்கமாக மாணவர்கள் யாரும் செல்லவில்லை. இல்லாவிட்டால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கும் பரிதாபம் நேர்ந்திருக்கும்.
ஏழைகள் குடியிருப்புதானே அருகில் உள்ளது என்ற அலட்சியத்தால் சுவரை பராமரிக்காமல் விட்டுள்ளனர்.
இப்படி அலட்சியம் காட்டாமல் அடுத்த விபரீதம் நிகழ்வதற்குள் அங்கு புதிய சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
Social Plugin