சென்னையில் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் 5 பேர், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வியாழக்கிழமை அதிகாலை இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை வேளச்சேரி ஏ.எல். முதலி 2 வது சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 335 எண் வீட்டில், 5 வட மாநில இளைஞர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருப்பதாக சென்னை பெருநகரக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அவர்களில் ஒருவர், வங்கியில் கொள்ளைகளில் ஈடுபட்டதாக போலீஸ் வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பவரைப் போன்று உள்ளதாகவும் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் அடையாறு துணை ஆணையர் ஆர். சுதாகர், உதவி ஆணையர்கள் கண்ணன், மாணிக்கவேல், இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டின் ஜெயசீல், ரவி, சம்பத், சுந்தரேசன் உள்ளிட்ட 14 பேரைக் கொண்ட தனிப்படையினர் அந்த வீட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சென்றனர். வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்துவதற்காகக் கதவைத் தட்டினர். ஆனால் அவர்கள் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து போலீஸார் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டுக்குள் இருந்தவர்கள் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுடத் தொடங்கினர்.
இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீலின் இடது தோள்பட்டை, தலையில் துப்பாக்கி தோட்டாக்கள் உராய்ந்து காயம் ஏற்படுத்தின. இன்ஸ்பெக்டர் ரவியின் வயிற்றின் இடதுபுறத்தில் துப்பாக்கி தோட்டா உரசியது. இதையடுத்து போலீஸார் ஜன்னலின் வழியாக சுடத் தொடங்கினர். அதே வேளையில் மற்றொரு குழுவினர், வீட்டின் கதவை உடைத்தனர். அப்போது இரு தரப்பும் துப்பாக்கியால் மாறி, மாறி சுட்டுக்கொண்டனர்.
பட்டாசுகள் வெடிக்கும் சப்தம் போன்று அவை இருந்ததாக சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
போலீஸாரின் அதிரடி தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அந்த அறையில் இருந்த 5 இளைஞர்களும் ரத்த காயங்களுடன் சரிந்து விழுந்தனர்.
போலீஸார் காயமடைந்த இன்ஸ்பெக்டர்களையும், அந்த 5 இளைஞர்களையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வேனில் எடுத்துச் சென்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே 5 இளைஞர்களும் இறந்துவிட்டதாக அவர்களின் உடல்களைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இறந்த 5 இளைஞர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் நடந்த வீட்டுக்குள் யாரும் சென்றுவிடாமல் இருப்பதற்கு, போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்தைப் பெருநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதி, கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன், இணை ஆணையர் கே.பி. சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.
காட்டிக் கொடுத்த அடையாள அட்டைகள்:
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமத்தை வைத்து விசாரணை செய்ததில், இறந்தவர்கள் பிகார் மாநிலம் பத்வா மாவட்டம் மாஜிப்பூரைச் சேர்ந்த கிரிபாலி ராய் மகன் சந்திரிகா ராய், மாத்நாத் ஷா மகன் விநோத்குமார், ரகோபர் மாவட்டம் வைசாலியைச் சேர்ந்த பான்ஜிரே மகன் ஹரிஷ்குமார், நாளந்தாவைச் சேர்ந்த யமுனா பிரசாத் மகன் வினய் பிரசாத், மேற்கு வங்க மாநிலம் ஷிப்பூரைச் சேர்ந்த விஜய்சிங் மகன் அபய் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23-ல் ஒரு மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது. இது குறித்து துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மர்ம நபர்களைக் கைது செய்ய 26 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஹிந்தியில் பேசியதால், அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 14 லட்சத்தைக் கொள்ளையர்கள் மீண்டும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர். 27 நாள்களில் அடுத்தடுத்து இரு வங்கிகளில் கொள்ளை நடைபெற்றது காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அதேவேளையில் ஒரு மர்ம நபர், சென்னை புறநகரில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிப்பதற்கு நோட்டமிடும் காட்சி விடியோவில் பதிவானதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அந்தக் காட்சியையும், படத்தையும் காவல்துறையினர் புதன்கிழமை வெளியிட்டனர். இதை பார்த்து வேளச்சேரி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்து காவல்துறைக்கு புதன்கிழமை நள்ளிரவு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை, காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் சுட்டதால், போலீஸாரும் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டதில் 5 கொள்ளையர்களும் இறந்தனர்.
Social Plugin