காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் தினமும் பகலில் 6 மணி நேரம், இரவில் 3 மணி நேரம் என மொத்தம் 9 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4, 5 மற்றும் 13, 14, 15 வார்டில் நேற்றுபகல் 12 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இரவு 10 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் என சுமார் 200 திரண்டு, இரவு 10 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சென்னை - மாமல்லபுரம் சாலையின் இரு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
தகவல் கிடைத்ததும் மாமல்லபுரம் எஸ்பி கணேசன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, எஸ்ஐ குப்புசாமி மற்றும் மின்வாரிய இளநிலை செயற்பொறியாளர் பார்வதிநாதன் ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினர். ‘இப்பகுதியில் உள்ள 3 டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதனால்தான் மின்சாரம் நிறுத்தப்பட்டது’ என்று இளநிலை பொறியாளர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்கு பிறகு மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த மறியலால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
அதிகாரிகள் திணறல்:
திருப்போரூர் அருகேயுள்ள சிறுதாவூர் பங்களாவில் முதல்வர் ஜெயலலிதா தங்கியுள்ளார். இதையடுத்து போலீஸ் உயரதிகாரிகளும் திருப்போரூர், சிறுதாவூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர். மக்கள் நடத்திய மறியலால், அதிகாரிகள் சென்ற வாகனம், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. மேலும், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு திருப்போரூரில் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்து புறப்பட்ட அதிகாரிகளின் வாகனங்களும் டிராபிக்கில் மாட்டிக்கொண்டது. இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
Social Plugin