Hot Posts

6/recent/ticker-posts

துடைப்பத்துடன் டாஸ்மாக் பாரில் புகுந்து குடிமகன்களை ஓட ஓட விரட்டியடித்த பெண்கள்!!


நீண்ட நாட்களாக தொல்லை தந்த குடிமகன்களை, டாஸ்மாக் பாருக்குள் புகுந்து பெண்களே விரட்டியடித்தனர்.  சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூவில் டாஸ்மாக் கடை (எண் 435) உள்ளது. இந்த சாலையில் பள்ளி, மருத்துவமனை, பெண்கள் வேலை செய்யும் எக்ஸ்போர்ட் நிறுவனம், பேங்க், மார்க்கெட் உள்ளன. 


இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். டாஸ்மாக் கடையையொட்டி திருவீதி அம்மன் கோயில் சந்து உள்ளது. இதன் வழியாக மஞ்சகொல்லை தெருவுக்கு மக்கள் செல்வார்கள். இந்த பகுதியில் தினமும் இரவில் குடிமகன்கள் குடித்து விட்டு கும்மாளம் அடிப்பது வழக்கம். அந்த வழியாக போகும் பெண்களை கேலி செய்வது, பெண்கள் எதிரே சிறுநீர் கழிப்பது, மது பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைப்பது என அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தனர். டாஸ்மாக் கடையையொட்டி உள்ள பாரை பயன்படுத்தாமல் மது பாட்டில்களுடன் ரோட்டிற்கு வந்து விடுவார்கள். 

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. குடிமகன்களில் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஆவேசம் அடைந்த அப்பகுதி பெண்கள் 25க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு 9 மணியளவில் கையில் துடைப்பத்துடன் திருவீதியம்மன் கோயில் சந்து பகுதிக்கு திரண்டு வந்தனர். 


அங்கிருந்த குடிமகன்களை ஓட ஓட விரட்டியடித்தனர். பின்னர் டாஸ்மாக் பாருக்கு சென்றனர். பெண்கள் கூட்டமாக வருவதை பார்த்தும் பாரில் மது குடித்து கொண்டிருந்தவர்கள் பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கூச்சலிட்ட பிறகு அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர். குடிமகன்களை பெண்களே விரட்டியடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.