Hot Posts

6/recent/ticker-posts

மாணவர்களே எக்ஸாம் டென்ஷனை விரட்டுங்கள்!!


தேர்வு பயத்தினால் ஹார்மோன்க ளின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன்  பல வழிகளில் வெளிப்படும். மறதி,சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். 

தேர்வு பயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.அதிக  மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனச்சிக்கலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். 

பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகளால் குழந்தைகள் எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதுடன் எதிர்கால லட்சியம் பற்றியும் கோடிட்டுக் காட்டிவிட்டால் குழந்தைகள் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும்.ர்வு பயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். 

சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருப் பது, தூக்கமின்மை, முதுகுவலி, தலை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை இறுக்கம், கவனக்குறைவு, படபடப்பு, வயிற்று போக்கு, படிப்பில் ஈடுபாடு குறைதல் போன்ற தொல்லைகளும் உண்டாகும். இதனால் சத்துள்ள ஆகாரம் இல்லாமல் உடல் பலவீனம் அடையும். 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகள் குறித்த நேரத்துக்கு தூங்கி, சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள பெற்றோர் உதவ வேண்டும். தேர்வு பயம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். 

தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை: கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.  

படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள்.
நிச்சயம் வெற்றி உங்களுக்கே!!!
              ஆக்கம்,
          A.ஆபிதீன்,
              அதிரை.