Hot Posts

6/recent/ticker-posts

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டி:வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த்!!


சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதாகவும், தேமுதிக வேட்பாளராக முத்துக்குமார் போட்டியிடுவார் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கும் முன்னரே, ஆளுங்கட்சியான அதிமுக தனது வேட்பாளரை முதன் முதலாக அறிவித்தது.

இதையடுத்து ஆளும்கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அடங்கிய குழு அங்கேயே முகாமிட்டுள்ளது.
  • அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி போட்டியிடுகிறார்.
  • திமுக வேட்பாளராக ஜவஹர் சூர்யகுமார் போட்டியிடுகிறார். 
  • மதிமுக வேட்பாளராக சதன் திருமலைகுமார் போட்டியிடுகிறார். 


இடைத்தேர்தலில், தே.மு.தி.க.போட்டியிடுமா என்ற கேள்விக்கு, வேட்பாளர் அறிவிப்பின் மூலம், தே.மு.தி.க தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேமுதிக வேட்பாளர் அறிவிப்பின் மூலம் நான்கு முனைப்போட்டியாகி உள்ளது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் ஆளுங்கட்சியோடு இணைந்து போட்டியிட்டது. தற்போது இந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியதால், ஆளும் கட்சி கடும் சவாலை சந்திக்க நேரிடும்.

செவ்வாய் அன்று பொதுக்குழு நடக்க இருக்கும் நேரத்தில், திங்கள் அன்றே இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப் பற்றியும், கூடவே வேட்பாளர் அறிவிப்பும் வந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் குறித்து சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சவால் விட்டதால், பொதுக்குழுவில் விஜயகாந்த் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.