Hot Posts

6/recent/ticker-posts

இளம் வீரர்களுக்காக ஷேவாக் நீக்கம்: டோனியின் முடிவு எடுபடவில்லை!!


இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முத்தரப்பு ஒருநாள்  போட்டியின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடந்தது. ஆஸ்திரேலியா- இந்தியா மோதிய இந்தப்போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெற்றும் ஆட்டம் எடுபடவில்லை. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினாலும் ரன்களை அள்ளிக்கொடுத்து விட்டனர்.
 
மழை குறுக்கிடுவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா ரன் எடுக்க திணறியது. 2 விக்கெட்டுகளையும் இழந்தது. மழை நின்று ஓவர் குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக அடித்து ரன் குவித்துவிட்டனர். அடுத்து இந்திய அணியின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை.
 
இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவும், ஷேவாக் சரியான “பார்ம்-ல் இல்லாததாலும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை சேர்த்து ரோகித் சர்மா அல்லது சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவரை நீக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டோனி கடைசி நேரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுத்து ஷேவாக்கை நீக்கினார்.
 
தெண்டுல்கர் வழக்கம்போல் சொதப்பிவிட்டார். 100-வது சதத்துக்காக காத்திருக்கும் அவரது சாதனை பட்டியல் தொடர்வதற்காகவே அணியில் சேர்க்கப்பட்டது போல் இருந்தது. ஒவ்வொரு முறையும் 100-வது சதம் அடிக்காமல் ஏமாற்றியதுபோல் நேற்றும் வெறும் 2 ரன்களுடன் அவுட் ஆனார்.
 
இக்கட்டான நேரத்தில் அணியை தூக்கி நிறுத்துவதற்கு பதில் அவர் அவுட் ஆகி அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார் என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு. எந்த நிலையிலும் அணியை சரிவில் இருந்து மீட்க வீரர்கள் இருக்கிறார்கள் என்பதுபோல் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. முதல் 10 ஓவரில் 25 ரன்களே எடுத்த ஆஸ்திரேலியா அடுத்த 22 ஓவர்களில் 191 ரன்களை குவித்தது.
 
தொடக்க ஆட்டக்காரர் வாடே 67 ரன் குவித்தது சிறப்பம்சம். மைக்ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி சகோதரர்களால் ஆஸ்திரேலியா நேற்று தலை நிமிர்ந்தது. இருவரும் சேர்ந்து 106 ரன்கள் எடுத்தனர். தோல்வி பற்றி கேப்டன் டோனி கூறுகையில், வழக்கம் போல் பந்து வீச்சாளர்களை குறை கூறி சாடினார். ஜடேஜா அதிக ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டார்.
 
இதுபோல் தொடர்ந்து விளையாடினால் அவர் அணியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று டோனி எச்சரிக்கை விடுத்தார்.வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடாததால் இந்தியா தோல்வியை தழுவியதாக டோனி ஒப்புக்கொண்டார்.  முத்தரப்பு தொடரில் 2-வது போட்டி நாளை மறுநாள்
(8-ந்தேதி) பெர்த்தில் நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.