சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் பட்டியல் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் சங்கரன்கோவில் தனித்தொகுதியில் போட்டியிட்ட சொ.கருப்பசாமி வெற்றி பெற்றார். அமைச்சராக இருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
இந்நிலையில் இத்தொகுதியில் இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. தொகுதி உறுப்பினர் இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
எனவே, ஏப்ரல் 21ம் தேதிக்குள் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி போட்டியிடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்தார்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கேட்ட போது,சங்கரன்கோவில் இடைத்தேர்தலை ஏப்ரல் 21ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக வாக்குசாவடி அதிகாரிகள் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் மின்னணு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். வெளிமாநில போலீசாரை பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்துவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
Social Plugin