Hot Posts

6/recent/ticker-posts

இலங்கை கடற்படை வெறியாட்டம்- தாக்குதலில் 16 தமிழக மீனவர்கள் காயம்!!

இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 16 ராமேஸ்வரம் மீனவர்கள் காயமடைந்தனர். நடுக் கடலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சர்வதேச கடல் எல்லைக்கு அருகே, பாக் ஜலசந்தியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்களப் படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.

மரக் கட்டைகள், கற்கள், பாட்டில்களைக் கொண்டு சிங்களப் படையினர் இந்த இனவெறித் தாக்குதலை தொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் 25 வயது மீனவர் ஒருவரின் கால் முறிந்தது. மொத்தம் 16 பேர் படுகாயமடைந்தனர்.

கால் முறிவு ஏற்பட்டுள்ள மீனவர் மதியழகனை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மதியழகன் தாக்குதல் குறித்துக் கூறுகையில், இலங்கை கடற்படையினர் மிகக் கொடூரமாக தாக்கினர். எங்களது மீனவர்கள் 25 படகுகளில் இருந்தோம். எங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் பல படகுகள் சேதமடைந்தன. மீன்பிடி வலைகளையும் அறுத்தெறிந்தனர் என்றார்.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று தமிழக மீன்வளத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து வெறித்தனமாக தாக்கப்பட்டு வருவது குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளாமலேயே இருந்து வருவது தங்களை அதிக வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக மீனவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

மீனவர்கள் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், கேரள கடல் பகுதியில், இத்தாலியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவுடன் மத்திய அரசு பதறியடித்து செயல்பட்டது. இத்தாலி கப்பலை பிடித்தனர், 2 பாதுகாவலர்களையும் பிடித்தனர். அதேபோல சிங்கப்பூர் கப்பல் ஒன்று கேரள மீனவர்களின் படகை இடித்து விட்டுச் சென்ற சம்பவத்திலும் கேரளத் தரப்புக்கு மத்திய அரசு பெரும் உதவி புரிந்தது. இவ்வளவு துரிதமாக இதுவரை மத்திய அரசு மீனவர்கள் விஷயத்தில் செயல்பட்டதே இல்லை. ஆனால் இதுவரை இலங்கை கடற்படைக் காடையர்களால் 300க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை ஒரு உருப்படியான, துரிதமான நடவடிக்கை எதையும் இந்தியா எடுக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றனர்.

மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது...?