Hot Posts

6/recent/ticker-posts

மாநில அரசின் தேவைகளில் அக்கறை காட்ட வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!!

 பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடுமையான மின்சார தட்டுப்பாடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பெல், என்எல்சி, என்டிபிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஆரம்பித்துள்ள மிகப்பெரிய மின்சார திட்டங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க தமிழகம் முயற்சித்து வருகிறது. 


குறிப்பிடத்தக்க அளவு மின்சாரத்துக்கான ஒப்பந்தம் இறுதி செய்வதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளது. ஆனால் டிரான்ஸ்மிஷன் காரிடார் வசதி இல்லாததால் இந்த மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் சிக்கல் உள்ளது. உதாரணமாக குஜராத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.


 இதில் 203 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்துக்கு கொண்டுவர முடிந்தது. இதேபோல் என்டிபிசியின் தாத்ரி பவர் ஸ்டேஷனிலிருந்து (உத்தரபிரதேசம்) 727 மெகாவாட் மின்சாரத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதிலும் தடை ஏற்பட்டது. 2012 மார்ச் மாதத்தில் மட்டும் வெளிஇடத்திலிருந்து 1750 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஆனால் சென்ட்ரல் லோடு டெஸ்பாச்சிங் அத்தாரிட்டியினால் 350 மெகாவாட் மின்சாரம் கொண்டுவரும் அளவுக்கே காரிடார் வசதி வழங்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு விவரிக்க முடியாத மனவேதனை ஏற்பட்டுள்ளது.

காரிடார் பிரச்னை காரணமாக தமிழ்நாட்டின் மின்சார பற்றாக்குறை சூழ்நிலை மேலும் அதிகரித்துள்ளது. காரிடார் நெருக்கடி குறித்து மத்திய அதிகாரிகளுக்கு பல முறை நினைவூட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு தமிழ்நாட்டுக்கு 1000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் டிரான்ஸ்மிஷன் செய்வதற்கான காரிடார் வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள மத்திய மின்திட்டங்கள் செயல்பட துவங்கும் வரை மத்திய தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை ஒரு வருடத்துக்கு வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 


பலமுறை கோரிக்கை வைத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மத்திய அரசின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. மாநில உரிமைகளில் தலையிடுவதில் காட்டும் அக்கறையை மாநில அரசின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதிலும் காட்ட வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஒப்பந்த மின்சாரம் முழுமையாக கிடைப்பதற்கு தடையாக இருக்கும் காரிடார் நெருக்கடி பிரச்னையை நீங்கள் தலையிட்டு தீர்க்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். மேலும் நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.