Hot Posts

6/recent/ticker-posts

இலங்கைப் போர்க்குற்ற வீடியோவை பார்த்து வடிந்த கண்ணீர் இன்னும் நிற்கவில்லை: கருணாநிதி!!


ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

திமுகவைப் பொறுத்த வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. 

ஏப்ரல் 25ம் நாளன்று வெளியிடப்பட்ட இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசின் ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும், போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொன்று விட்டதாகவும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே சுட்டிக்காட்டி, 1.3.2012 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில்

திமுகவின் நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக் கூடாது என்று வலியுறுத்தினேன்.

அதன் தொடர்ச்சியாக 2.3.2012 அன்று நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து கழகத்தின் நிலைப்பாட்டினையும், உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார்.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் 2009ம் ஆண்டு இலங்கையில் இந்தக் கோரச் சம்பவங்கள் நடைபெற்ற போதே 23.1.2009 அன்று ஆட்சியில் இருந்த திமுக பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, கேட்டுக் கேட்டு பயன் விளையாமல் போனதால்-இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம், உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து, அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப்பூ மலர்ந்திட ஆவன செய்திடுக! என்று மத்திய அரசுக்கு உணர்வு பூர்வமாக வேண்டுகோள் விடுத்தோம்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு தெரிவித்திருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 8.3.2012 அன்று சென்னையில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் முக்கியமாக சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு உரிய ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க வேண்டும். அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமையானதும் கடுமையானதுமான போர்க் குற்றங்கள் அனைத்தையும் இந்திய அரசு நினைவிலே கொண்டு, இனியும் காலம் தாழ்த்தாது, இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்திட வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.