கூடங்குளத்தில் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள், போலீஸார் சென்ற வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயங்கச் செய்யும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டனர். இதற்கான ஒத்துழைப்பையும் தமிழக அரசு நேற்று முறைப்படி அறிவித்து விட்டது. இதையடுத்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கூடங்குளம் கிராமத்தில் சென்ற போலீஸாரின் வாகனங்கள் மீது இன்று போராட்டம் நடத்தி வரும் மக்கள் கல்வீசித் தாக்கினர். குறிப்பாக நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி சென்ற வாகனம் மீது குறி வைத்து தாக்கப்பட்டது. இதில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது.
இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Social Plugin