Hot Posts

6/recent/ticker-posts

கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு குறைகிறது பஞ்சாயத்து தலைவர்கள் கலெக்டரிடம் தகவல்!!


கூடங்குளம் பகுதியில் அணுஉலைக்கான எதிர்ப்பு குறைந்து வருவதாக ராதாபுரத்தில் நேற்று பஞ்சாயத்து தலைவர்களுடன் கலெக்டர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் கைதான 178 பேர் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை விடுதலை செய்யக்கோரி அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் இடிந்தகரையில் நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கூத்தங்குழிக்கு சென்று மக்களிடம் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்ததாக தெரிகிறது. 


இந்நிலையில் கூடங்குளம் அணுஉலைகுறித்து தற்போது மக்களிடையே நிலவி வரும் கருத்துகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராதாபுரம் பயணியர் விடுதியில் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. இதில் கலெக்டர் செல்வராஜ், நெல்லை டிஐஜி வரதராஜு, எஸ்பி விஜயேந்திரபிதரி, சேரன்மகாதேவி சப் கலெக்டர் பாஜி பகாரே ரோகினி ராம்தாஸ் ஆகியோர் ராதாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த சில பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தனர். 

அப்போது அணுஉலை குறித்து ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியத்தை சேர்ந்த 12 பஞ்சாயத்து நிர்வாகிகளும் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கியதாலும், தொடர்மின்தடை, வேலையின்மை போன்றவற்றாலும் மக்களிடம் அணுஉலைக்கான எதிர்ப்பு குறைந்து வருவதாகவும் தெரிவித்தனர். அப்போது அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களை தங்களுக்கு ஆதரவாக கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.