Hot Posts

6/recent/ticker-posts

ஐ.பி.எல்.போட்டி மின்சாரத்துக்கு தடை கோரி வழக்கு: நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவு!!


 சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு மின்சாரம் வழங்க தடை கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் பெனிட்டோ தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் தற்போது கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. மத்திய அரசு, மாநில அரசின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மின்தட்டுப்பாடு இல்லை. 9 அணிகள் பங்கேற்கும் 5-வது ஐ.பி.எல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 4-ந் தேதியில் இருந்து மே மாதம் 27-ந் தேதி வரை நடக்கிறது.


இந்த போட்டிக்கான மின்சாரத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. மின்சாரத்துக்கான தொகையை கிரிக்கெட் வாரியம் அரசுக்கு செலுத்துகிறது. கிரிக்கெட் போட்டிக்கு அதிகமான மின்சாரம் தேவைப்படும். தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் அதிகப்படியான மின்சாரத்தை விளையாட்டு போட்டிக்காக கிரிக்கெட் வாரியத்துக்கு அரசு அளிப்பது சரியல்ல.

எனவே தனியாக பவர் ஜெனரேட்டர் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். கிரிக்கெட் போட்டிக்காக அளிக்கப்பட உள்ள மின்சாரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சித்ராவெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் 19.3.2012 கொடுத்த மனுவை மத்திய, மாநில அரசுகள், மின்வாரிய அதிகாரிகள் வருகிற 4-ந் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.