Hot Posts

6/recent/ticker-posts

சங்கரன்கோவிலில் நாளை "வாக்கு" எண்ணிக்கை:வெல்லப் போவது யார்?

 சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் இடைத்தேர்தலில் தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் பெற்றவர்கள் நாளை (21ம் தேதி) காலை 6 மணி வரை ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இடைத்தேர்தலை பொறுத்தவரை தபால் ஓட்டு போடுவதற்காக 377 படிவங்கள் முப்படைகளில் பணியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தபால் ஓட்டுகள் நாளை (21ம் தேதி) காலை 6 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தபால் ஓட்டுக்களைப் பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பு வரை ஏற்றுக் கொள்ளப்படும். தபால் ஓட்டு பெட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை(21ம் தேதி) காலை 6 மணி வரை தபால் ஓட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கை புளியங்குடி வீரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது என்றனர்.