Hot Posts

6/recent/ticker-posts

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்: தா.பாண்டியன்!!


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழக அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை வரவேற்கிறோம். அறிவி்க்கப்பட்டுள்ள ரூ.500 கோடி மதிப்புள்ள திட்டத்தை பட்ஜெட் அறிவிப்பில் சேர்க்க வேண்டும். போராட்டகாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

நிலவி வரும் கடும் மின் தட்டுப்பாடு தீரும் வரை கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தும். 

போராட்டக்காரர்கள் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளுடன் பேசி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தமிழகத்தின் பிற பகுதியில் இருப்பவர்களின் நலனை தடுக்கும் வகையில் கூடங்குளத்தில் உள்ளவர்கள் செயல்பட வேண்டாம். 

மத்திய அரசு வரவு-செலவுக் கணக்கை சமர்பித்த மறுநாளே ரயில்வே துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். மத்திய அரசு கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. வரிகொள்கையைப் பொறுத்த வரை பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.30,000 கோடி திரட்டும் முயற்சியை கைவிட வேண்டும். மறைமுக வரியாக ரூ.48,000 கோடி விதித்திருப்பதும். மானியத்தைக் குறைப்பதும் மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

125 போர் விமானங்கள் வாங்கும் முடிவு அரசின் அகம்பாவத்தை காட்டுகிறது. பட்ஜெட்டில் விவசாயத்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீரழித்து வருகிறது. இது குறித்து பாட்னாவில் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார்.