Hot Posts

6/recent/ticker-posts

தமிழகத்தில் 20 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு- தடுப்பூசிகள் தயார்!!


சென்னை,கோவை, விழுப்புரம், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புக்குள்ளான 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்காக 25 ஆயிர தடுப்பூசிகளை மத்திய அரசும் தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

2009-ம் ஆண்டு பெரும் பீதியை உருவாக்கிய பன்றிக்காய்ச்சல் நோய் மீண்டும் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற விவசாயி பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியானதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதன் தீவிரம் உணரப்பட்டது.

கோவை, திருப்பூர் மற்றும் சென்னையில் மட்டும் 18 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மற்றும் சேலத்தில் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டோரை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல்

கோவையில் அதிஷ்டா என்ற சிறுமிக்கு இன்று பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவை எஸ்.எஸ். குளம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த அதிஷ்டாவுக்கு தொடர்ந்து சளி மற்றும் காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவருக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிரது.

இதனிடையே அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான `டாமிபுளு' மாத்திரைகளும் அனுப்பப்பட்டு உள்ளன.


சென்னையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 2 சிறுமிகள் படித்து வரும் கொருக்குப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் 300 மாண மாணவியருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் எவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே ரயில்நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான 25 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் கொற்கை பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. தேவைப்படும் நிலையில் பொதுமக்களும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.