Hot Posts

6/recent/ticker-posts

தேர்தல் முடிவும் நம் கடமை உணர்வும்.....



அன்பான பிறை நெஞ்சங்களுக்கு! 

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன.  திமுக தலைமையிலான ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் வழங்கி இருக்கின்றனர்.  இது நம் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத்  தந்திருக்கிறது. அதிலும், தி.மு.கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று நல்லாட்சி தர வேண்டும் என்பதே நமது இலக்காக இருந்தது. அது நிறைவேறி இருக்கிறது. தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நமது இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். 

கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நாம் தமிழகமெங்கும் பயணித்து, அயராது உழைத்து, தளராது பாடுபட்டு தேர்தல் பணி ஆற்றி இருக்கிறோம். எதிர்பார்த்தவாறு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று, களம் கண்ட வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.  இதன் மூலம் ஆட்சி மாற்றத்திற்கான நல்ல முடிவை தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாக்காளப் பெருமக்களுக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதற்காக உழைத்த கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், அதன்  தொண்டர்களுக்கும் நமது பாராட்டுக்கள். 

அதே சமயத்தில் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் நமக்கு ஒதுக்கப்பட்டு, நம் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற முடியாமல் போனது நம் எல்லோருக்குமே பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.  காரணங்கள் இவை, இவை என்று அவரவர் சொல்லும் விமர்சனங்கள் பலவாராக இருந்தாலும், இது இறைவனின் நாட்டம் என முதலில் ஏற்றுக் கொள்வோம். 

தேர்தலில் வெற்றி தோல்விகள் மாறிமாறி இடம்பெறுவது எதார்த்தம். அதனால் தோல்விகள் வருகிறபோது மனம் தளர வேண்டியதில்லை. நாமும்  வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி கண்டிருக்கிறோம். எனவே மீண்டும் வெற்றி பெறுவோம்; இன்ஷா அல்லாஹ். 

ஆனாலும், நடந்து முடிந்த தேர்தலில் நாம் எடுத்த முடிவுகளும், வகுத்த வியூகங்களும் சரியானவைதானா?  'சரி' என்றால் தோல்விக்குக் காரணம் என்ன? 'சரி இல்லை' என்றால் குறைகளை எப்படி களைவது? என்கிற பகுப்பாய்வு மிக,  மிக அவசியம். அதனை உரிய நேரத்தில் தலைவர் பேராசிரியர் அவர்கள் செய்வார்கள். தொடர்ந்து, எல்லோருமாகக் கலந்துபேசி, பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் அடிப்படையில் பணிகள் ஆற்றுவோம்; நம்பிக்கையோடு பயணிப்போம். 

சில கசப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டாலும் கட்சியின் எதிர்கால நலன் கருதியும், சமுதாயம் நம்மீது காட்டுகிற கண்ணியம் கருதியும், சமூக மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் கருதியும் ஒற்றுமையோடும் ஒருங்கிணைந்தும் பயணிக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. கசப்புகளும் காயங்களும் கால ஓட்டத்தில் கரைந்து போகும். அதே சமயத்தில்  ஈமானிய உறுதியும், இறை மீதான நம்பிக்கையும், நல்லெண்ண பார்வையும், தளராத முயற்சியும்,  தாழாத உழைப்பும், தடுமாற்றமில்லாத கொள்கைப்பிடிப்பும் எப்போதும் நல்ல இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். இதனையே நம் தலைவர்கள் நமக்கு வழிகாட்டுதலாக காட்டியிருக்கிறார்கள். 

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற பொதுத் தளங்களில் வெளியிடுகிற நமது கருத்துக்களில் மிக, மிக நிதானம் தேவை; வருத்தப்பட்டு வார்த்தைகளை வடிப்பதும், அவசரப்பட்டு எதையும் அதிவேகத்தில் பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நேரத்தில்தான் பொறுமையும், நிதானமும், பெருந்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டும். அசாதாரண நிகழ்வுகள் அனைத்தும் கால ஓட்டத்தில் கடந்து போகும்; ஆனால் இயக்கம் 'கொஞ்சமும் காயப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்; அதற்கான பொறுப்பும் கடமையும் நம் எல்லோருக்குமே இருக்கிறது' என்பதனை உணர்ந்து செயலாற்றுவோம். 

வல்ல இறைவனின் பேருதவியும், பெருங்கருணையும் நம்மீது என்றென்றும் நிலைத்து நிற்கும். இன்ஷா அல்லாஹ்.  

அன்புடன், 
எம். அப்துல் ரஹ்மான்
மாநில முதன்மை துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.